AnilKumar: ‘என் தந்தை ஒரு போராளி’ - அஜித் சகோதரர் அனில் குமார் பேட்டி!
Mar 24, 2023, 02:46 PM IST
தன்னுடைய தந்தை ஒரு போராளி என்று அஜித் குமாரின் சகோதரர் அனில்குமார் பேசியிருக்கிறார்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
இதனையறிந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை சமூகவலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அஜித்தின் சகோதரரான அனில் குமார் தன்னுடைய தந்தை பற்றி மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது,“எங்களுடைய அப்பாவுக்கு உண்மையில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்களை ஸ்டிக்ட்டாக வளர்க்கவில்லை. எங்களுக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார். அவர் உண்மையில் ஒரு போராளி. படிப்பில் அவருக்கு பெரிதாக நாட்டம் இல்லை.
ஆனால் அவர் மிகவும் புத்திசாலி.65 வயதிலும் அவர் இன்டர்நெட்டை மிகவும் நன்றாக பயன்படுத்தும் அளவிற்கு தனனை தகவமைத்து கொண்டார். புது டெக்னாலாஜிகளையும் அவர் தெரிந்து கொண்டார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது. டிகிரி ஒன்றும் வாங்கவில்லை என்றாலும் அப்பா புத்திசாலி என்று. அவர் எங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து, பொறுப்போடு நடக்க வைத்தார்." என்று பேசினார்.
முன்னதாக, அஜித் தந்தை இறப்பையொட்டி அவரின் இறுதிச்சடங்கை நடத்த ஒத்துழைக்குமாறு அஜித்தின் குடும்பம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், “ எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார்.இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும் அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டாபிக்ஸ்