Varalaxmi Sarathkumar: போதைப்பொருள் வழக்கு..NIA தரப்பில் இருந்து சம்மனா?- நொந்து அறிக்கை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்
Aug 29, 2023, 06:56 PM IST
என்.ஐ.ஏ தரப்பில் இருந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில்இது குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் "அண்மையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு நான் முன் வந்து விளக்கம் கொடுப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். ஆதி லிங்கம் தொடர்பான வழக்கில் என். ஐ.ஏ தரப்பில் இருந்து எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது என்று உலாவிக்கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. எனக்கு அப்படியான எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் சந்திப்பதிற்கும் எனக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை. ஆதிலிங்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குறுகிய கால இடைவெளியில் என்னிடம் பகுதி நேர மேலாளராக பணியாற்றினார்.
அந்த நேரத்தில் என்னிடம் பலர் பகுதி நேர மேலாளர்களாக பணியாற்றினர். அவர் என்னுடன் பணியாற்றிய காலத்திற்கு பிறகு இன்று வரை அவருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த செய்தியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
இந்த நாட்களில், பிரபலங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் எந்த விதமான விளக்கமும் கேட்காமல் வெளியிடுவது என்னை வருத்தமடைய செய்திருக்கிறது. ஆகையால், ஊகத்தின் அடிப்படையில் இல்லாமல் உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்ன நடந்தது?
கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதை பொருள்கள், ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் லிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளராக இருப்பதாக சொல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.
தமிழ்நாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள், வெளிநாட்டவர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் போதை பொருள்கள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புள்ளவர்களாக இருந்து வருகின்றனர்.
போதை பொருள்கள் கடத்தல் தொடர்பான ஈழத்தை சேர்ந்த குணா, புஷ்பராஜ், அஸ்மின் உள்ளிட்ட 13 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்தனர். அ்வர்களிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் நடந்திருக்கும் போதை பொருள்கள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குணா என்பவரின் கூட்டாளியாக இருந்து வரும் ஆதிலிங்கம் என்கிற லிங்கம் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து லிங்கம், நடிகை வரலட்சுமியின் உதவியாளராக இருப்பதும், போதை பொருள்கள், ஆயுத கடத்தலால் கிடைத்த பணத்தை அவர் சினிமாவில் முதலீடு செய்திருக்கலாம் என சந்தேகித்துள்ள என்ஐஏ அதிகாரிகள் வரலட்சுமியிடன் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதற்கு வரலட்சுமி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
டாபிக்ஸ்