கத்தினேன் கதறினேன் ஆனால்.. வாழ்க்கையே செதச்சிட்டாங்க.. கணவர் விட்டுட்டு போயிட்டாரு.. - குமுறிய ரஞ்சிதா
Oct 10, 2024, 11:52 AM IST
நடிகை ரஞ்சிதா தன் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக கணவர் தன்னை விட்டு சென்றுவிட்டார் என மனம் வருந்தி பேசியுள்ளார்.
தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் ரஞ்சிதா என்ற பெயரை மறந்திருக்க மாட்டார்கள். எத்தனையோ படங்களில் நடித்தபோது கிடைக்காத விளம்பரம் ஒரே வீடியோவால் கிடைத்தது. இதுவரை பெற்ற புகழ், பெயர் என அனைத்தையும் வழித்து எடுத்து, நடுத்தெருவில் நிறுத்தியது நடிகை ரஞ்சிதாவை.
தேடிவந்த வாய்ப்பு
ஒரு பத்திரிகையாளராகவோ, ஐஏஎஸ் ஆகவோ வலம்வர வேண்டும் என நினைத்தவரை தேடி வந்தது பட வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என சினிமாவிற்குள் வந்தவர் தான் நடிகை ரஞ்சிதா.
தெலுங்கு திரையுலகில் ஆரம்பித்த இவரது சினிமா பயணம், தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் ஹிட் அடித்தது. வாத்து மேய்க்குற பெண்ணாக தமிழ் திரையுலகிற்கு ரஞ்சிதாவை அறிமுகப்படுத்தியிருப்பார் பாரதிராஜா. பின்நாளில், அவர் மளமளவென வளர்ந்து, காதல், வீரம், ரொமான்ஸ், கிளாமர் என அனைத்திலும் தன் நடிப்பை பின்னி எடுத்திருப்பார்.
கிராமத்து குயில் டூ கிளாமர் குயின்
'மணியே மணிக்குயிலே'ன்னு ஆரம்பத்தில கிராமத்து பாட்ட பாடிட்டு இருந்தவங்க அப்படியே வளர்ந்து வந்து, 'கண்ணா என் சேலைக்குள்ள கட்டெரும்பு புகுந்துடுச்சு'ன்னு ரசிகர்களை கிரங்க வச்சிருப்பாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நடிக்குறதுல இருந்து ஒதுங்குன அவங்க ராணுவ வீரர் ஒருத்தரை காதலிச்சு கல்யாணமும் பண்ணினாங்க.
ராணுவ வீரராக இருந்தாலும் தன் கணவர் ரொம்ப அன்பானவர். அவர் கோபமே படமாட்டார் எனக்கூறி, வாழ்க்கையை அவருக்கு பிடித்த மாதிரி வாழத் தொடங்கினார். தொடர்ந்து ரஞ்சிதாவின் குழந்தைகள் எல்லாம் பெரியவர்களான சமயத்தில், வில்லு படத்தில் பல வருடங்களுக்குப் பின் நடித்திருப்பார். பின், ராவணன் படத்தில் பிரபுவின் மனைவியாக நடித்திருப்பார்.
ஓர் இரவில் மாறிய கதை
இப்படி, குழந்தைகள் குடும்பம் என சென்ற ரஞ்சிதா ஒரே நாள் இரவில் ஊரறிய, உலகறிய வசைபாடப்பட்டார். சாமியார் நித்தியானந்தாவின் சீடரான ரஞ்சிதா, அவருடன் இணைத்து பேசப்பட்டு உலகம் முழுக்க ஒரே நாளில் பிரபலமானார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது நான் அல்ல என அவர் பலமுறை கூறியிருந்தாலும், அவர் நடிகை என்றே ஒரே காரணத்திற்காக அதனை ஏற்க யாரும் தயாராக இல்லை. இதனால், வீட்டை விட்டே வெளியே வராமல் இருந்த ரஞ்சிதா சில நாட்களுக்குப் பின் தன்னுடைய ஆதங்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் மீடியாக்களிடம் சண்டையிட்டார்.
விட்டுச் சென்ற உறவுகள்
பின் இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வர எவ்வளவோ போராடினார். அவரால் முடியவில்லை. குடும்ப உறவுகள் அனைத்தும் விட்டுப் போனது. அவருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்த கணவரும் விட்டு விலகி விட்டார். வாழ்க்கையில் பிடிப்பற்று இருந்த இவர், தற்போது ஆம். நான் நித்தியானந்தாவின் பக்தை. இனி வாழ்வில் அவரைத் தான் பின்பற்ற உள்ளேன் எனக் கூறியதுடன், அவருடன் பயணித்து கைலாசா எனும் நாட்டை உருவாக்கி தற்போது அந்நாட்டின் பிரதமராகவும் உள்ளார் ரஞ்சிதா.
இந்நிலையில், அவருடைய பேட்டி ஒன்றும் வைரலாகி வருகிறது.
நான் பொதுவெளியில் தாக்கப்பட்டேன்
அந்தப் பேட்டியில், தான் அந்த வீடியோ வெளியான சமயத்தில் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளானார் என்பதையும், அதன் பின் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களையும் பேசி உள்ளார்.
அந்தப் பேட்டியில், மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து என் மரியாதையை பொதுவளியில் துகில் உரித்து விட்டார்கள். நான் பெரிய பணக்கார வீட்டு பெண் இல்லை. என் அப்பா பிசினஸ் மேனும் இல்லை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணா என்னால, இந்த சம்பவத்தில் இருந்து வெளியோ வர முடியவில்லை. இதுதொடர்பா நடந்த வழக்கில் இருந்தும் என்னை காப்பாற்ற என் அப்பாவால் முடியவில்லை.
எனக்கென யாரும் இல்லை
இந்த பிரச்சனையை எல்லாம் நினைத்து நினைத்து, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு எல்லாம் சென்றேன். பின் என்னை விட்டால் என் குடும்பத்தை பாதுகாக்க ஆள் இல்லை என நினைத்து சமாதானமாவேன்.
நான் நடிகையாக இருந்த சமயத்தில் வந்த கிசுகிசு எல்லாம் சூட்டிங் இல்லாத சமயத்தில் நான் புத்தகமும் கையுமாக இருப்பேன் என்பது தான். ஆனால், இப்போது அந்த புத்தகங்கள் தான் என்னை அமைதியாக்கி பக்குவப்படுத்தியது.
பிரிந்து சென்ற கணவர்
ஆனால், அந்த கசப்பான அனுபவம் தந்த வலி என்னை விட்டு போகும் முன் என் கணவர் என்னை விட்டு விலகிவிட்டார். எனக்கு நடந்த விஷயங்கள் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனைத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அவரால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நாங்கள் பிரிந்துவிட்டோம் என்றார்.
இனி இதுதான் முடிவு
என் இளமை காலத்தில் இருந்தே கடவுள், ஆன்மீகம் மீது அதிகம் பற்று வைத்துள்ளவள் நான். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன். என்னைப் பற்றி எத்தனாயோ விமர்சனங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், நான் இன்றும் நித்யானந்தாவின் பக்தைதான். இப்போதும் அவருடன் தான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன். ஆன்மீக வழியில் செயல்படுவேன் என தீர்க்கமாக கூறினார்.
தற்போது நித்யானந்தாவின் சீடராக இருக்கும் இவர் நித்யானந்த மயி ஸ்வாமி என தனது பெயரை மாற்றி கைலாசா நாட்டில் வசித்து வருகிறார் ரஞ்சிதா. மேலும் இவர் இந்நாட்டின் பிரதமராக இருந்து அங்குள்ள மக்களை பார்த்துக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.