Chennai Rains: 8 ஆண்டுகளுக்கு பிறகும் இப்படிதானா? 'இது கேவலமான விஷயம்'.. வெளுத்து வாங்கும் நடிகர் விஷால் - வீடியோ
Dec 04, 2023, 09:46 PM IST
Actor Vishal: மழைநீர் சேமிப்பு, வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என நடிகர் விஷால் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன் என்று நடிகர் விஷால் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "வணக்கம். புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்பிறகு தண்ணீர் தேங்க ஆரம்பிக்கும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015ஆம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.
8 ஆண்டுகளுக்கு பிறகும் அதைவிட மோசமாக இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு, வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. இது ஒரு விண்ணப்பம் தான். நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.
என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா பயத்தில் உள்ளனர். சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கும். ஆனால், இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். தயவு செய்து உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்