Vimal:முழு ஆரோக்கியமாக உள்ளேன்!சில்லறை தனமா பண்ணாதீங்க…யாரை சொல்கிறார் விமல்
Jan 07, 2023, 03:37 PM IST
உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விமல் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக அதில் தெரிவித்துள்ள அவர், தன் உடல்நிலை குறித்து வதந்த பரப்பியவர்களையும் வசைபாடியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் இளம் ஹீரோவாக இருந்து வரும் நடிகர் விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து சக நடிகர்கள், பிரபலங்கள் பலரும் விமலை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து தொடர்ந்து தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து நடிகர் விமல் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், விமலுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் இல்லை. முழுஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
தற்போது புதுமுக இயக்குநர் மைக்கேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். என்னுடன் கருணாஸ், பவன், நரேன் என பலரும் நடித்து வருகிறார்கள். இன்னும் சில நாள்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எனவே எனது உடல் நிலை பற்றி பரவி வரும் வதந்த போல் நெஞ்சுவலி எதுவும் இல்லை.
அதுமட்டுமில்லாமல் மதுவுக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட வீட்டிலேயே ரகசியமாய் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்க்கையில் நகைச்சுவையாக உள்ளது.
இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஏதோ வேண்டாத நபர்கள், விஷக்கிருமியை போன்றவர்கள் இதை செய்கிறார்கள்.
இதை யார் செய்கிறார்கள் எனவும் எனக்கு தெரியும். இதுபோன்று சின்னப்புள்ள தனமான வேலையை செய்யாமல் உழைக்கும் வழியை பாருங்கள். நீங்களும் வாழுங்கள். மற்றவர்களையும் வாழவிடுங்கள். சில்லறைத்தனமாக செய்து காயப்படுத்த வேண்டும் என நினைக்காதீர்கள்.
நான் காயப்படமாட்டேன். எனக்கு ஆண்டவன் கொடுத்த தெம்பும், அருளும் உள்ளது. யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்.
2023இல் நல்ல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து எனது படங்கள் வரவுள்ளன. என் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்து அனைவருக்கும் நன்றி"
இவ்வாறு அவர் விடியோவில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பசங்க திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். இதன் பிறகு களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு என பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.
இவர் முதன்முதலில் நடித்த விலங்கு என்கிற வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து கடந்த ஆண்டில் நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் பண மோசடி புகார் அளித்தார். அப்போது விமல் தரப்பிலிருந்து இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டதோடு, தான் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.\
இதையடுத்து விமலின் உடல்நிலை குறித்து தற்போது வதந்த பரவிய நிலையில், அதுதொடர்பாக விளக்கம் அளித்த விடியோவில் தன்னை பற்றி தவறான தகவல் பரப்பும் நபர் பற்றி தெரியும் எனவும், அவர் அதை நிறுத்திக்கொள்ளுமாறும் காட்டமாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விமல் உடல்நலத்துடன் உள்ளார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு ஒரு புறம் நிம்மதி பெருமூச்சை அளித்தாலும், விடியோவில் அவர் யாரை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பது குறித்து விவாதங்களை நடைபெற்று வருகிறது.
டாபிக்ஸ்