ரிலீஸ் சிக்கல்களுக்கு மத்தியில் கங்குவா படத்தைக் காண கோடிக்கணக்கில் செலவழித்த ரசிகர்கள்! ப்ரி புக்கிங் வசூல் நிலவரம்
Nov 13, 2024, 09:10 AM IST
உலகம் முழுவதும் நாளை சிறுத்தை சிவாவின் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் மட்டும் 4 கோடி ரூபாய் அளவிற்கு முன்பதிவு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
சூர்யா நடிப்பில் ஆக்ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக கங்குவா உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிரச்னை தீர்க்கப்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸுக்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், நாளை நவம்பர் 14ம் தேதி கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில் இப்படம் வெளியாக உள்ளது. எப்படியும் ரூ.2000 கோடி வசூல் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஞானவேல் ராஜா எதிர்பார்ப்பில் உள்ளார்.
வெளியீட்டில் சிக்கல்
ஆனால் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு திரைப்படங்களில் ஆன்லைன் புக்கிங் முறையாக தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. விநியோகஸ்தர் மற்றும் திரையரங்குகள் உரிமையாளர்கள் இடையே பங்குத்தொகை ஒப்பந்தம் இன்னும் முடியவில்லை என்ற தகவலும் வெளியாகிறது. விநியோகஸ்தர் தரப்பில் 75 சதவீதம் கேட்பதால் ஒப்பந்தத்தில் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் sacnilk.com தளம் இந்திய அளவில் கங்குவா திரைப்படம் எவ்வளவு முன்பதிவை பெற்றுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 30க்கும் மேற்பட்ட மொழிகளில் 2டி மற்றும் 3டி என இரண்டு விதமான காட்சிகளுக்கும் இதுவரை நடந்த முன்பதிவு விவரங்களை பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கில் எகிறும் வசூல்
தமிழ்நாட்டில் 2டியில் வெளியாகும் 974 காட்சிகளில் 33,720 டிக்கெட் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் 60 லட்சத்து 20 ஆயிரத்து 79 ரூபாய் வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
3டியில் வெளியாகும் 2651 காட்சிகளுக்கு 2 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 502 ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.
கன்னட மொழியில் காத்து வாங்கும் கங்குவா
தெலுங்கில், 2டி காட்சிகளுக்கு 49 லட்சத்து 88 ஆயிரத்து 887 ரூபாயும், 3டியில் 34 லட்சத்து 56 ஆயிரத்து 49 ரூபாயும், ஹிந்தியில் 2டி காட்சிகளுக்கு 6 லட்சத்து 63 ஆயிரத்து 177 ரூபாயும், 3டியில் 18 லட்சத்து 84 ஆயிரத்து 81 ரூபாய் வசூலைப் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
மலையாளத்தில் 2டியில் 39 ஆயிரத்து 247 ரூபாய் மட்டும் வசூலித்துள்ளது. அதுமட்டுமின்றி, கன்னட மொழியில் வெளியாகும் கங்குவா படத்திற்கு 2டியில் 10 பேரும் 3டியில் ஒருவர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர், இதனால், கன்னட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் காத்து வாங்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.
இதையடுத்து கங்குவா திரைப்படம் தற்போதைய நிலவரப்படி, சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 278 டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 4.01 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3டி யில் அசத்தப்போகும் படம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படம் 3டி தொழில் நுட்பத்திலும் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டடிருக்கும் நிலையில், படம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா படத்தின் கதை
கங்குவா படத்துக்கு 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை சிறுத்தை சிவா உருவாக்கி உள்ளார். அங்கு 3 தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களுக்குக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் யுத்தமாக மாறுகிறது. இதில் யார் வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதையாக உள்ளது.
கங்குவாவின் உலகம் நெருப்பை கடவுளாக கும்பிடுகிறார்கள். அதேபோல் ரத்தத்தை கடவுளாக வணங்கிறார்கள் உதிரனின் உலகம். நீரை கடவுளாக வழிபடும் மக்கள் இருக்கிறார்கள். இந்த மூன்று உலகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியை பேண்டஸி, ஆக்ஷன் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
டாபிக்ஸ்