22 Years of 12B: மிஸ்ஸான மாதவன்! வாய்ப்பை கெட்டியாக பிடித்த ஷாம் - ஒரே படம் இரண்டு விதமான கதைகளை சொன்ன 12பி
Sep 28, 2023, 06:40 AM IST
தமிழ் சினிமாவில் புதுமையான திரைக்கதை அமைப்புடன் வெளியாகி வாசூலை குவிக்காவிட்டாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படமாக 12பி அமைந்திருந்தது.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் புதுமையான கதை சொல்லல் பாணியை அறிமுகப்படுத்திய படமாக 12பி இருந்தது. ரெமாண்டிக் டிராமா பாணியில் உருவாகி இருந்த இந்த படத்தை மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கி, இயக்குநராக அறிமுகமானார்.
தமிழில் ஜென்டில்மேன் தொடங்கி காதலன், ஆசை, இந்தியன், வாலி, குஷி என ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இயக்குநர் ஜீவா புதுமையான கதைகளத்துடன் அப்போது டாப் ஹீரோயின்களாக இருந்து சிம்ரன், ஜோதிகா ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைத்தார். ஹீரோவாக முதலில் மாதவனை கமிட் செய்ய முயற்சித்தார். ஆனால் அது அமையாத நிலையில், மாடலிங்கில் இருந்த புதுமுகமான ஷாம்மை ஹீரோவாக்கினார்.
ஹாலிவுட் படமான ஸ்லைடிங் டோர் என்ற படத்தை போன்ற கதை பாணியில் இரண்டு விதமான திரைக்கதையுடன் 12பி படமும் உருவாக்கப்பட்டது. படத்தின் ஹீரோ ஷாம் பேருந்தை பிடித்தால் ஒரு கதை, பிடிக்காவிட்டால் இன்னொரு கதை என்ற புதுமையான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்ட உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்தது.
இந்த படத்தின் முதல் 12 நிமிடங்களை மிஸ் செய்ய வேண்டாம் என கூறி புரொமோட் செய்யப்பட்டது. அந்த 12வது நிமிடத்தில் தான் படத்தின் முக்கிய திருப்பமாக அமையும் ஹீரோ பேருந்து பிடிக்கும் காட்சி அமைந்திருக்கும். காமெடிக்கு விவேக், மயில்சாமி, ஸ்ரீநாத் கேங்குகளின் லூட்டி படம் முழுவதும் அட்ராசட்டி கிளப்பும் விதமாக பட்டைய கிளப்பியிருக்கும்.
சுஜாதா வசனம் எழுதிய படங்களில் படங்களில் ஒன்றாக இருந்து வரும் 12பி, இளமை துள்ளும் உரையாடல்களுடன் கவனத்தை ஈர்த்தன. பாலிவுட் நடிகர்களான சுனில் ஷெட்டி, மூன்மூன் சென் ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்கள்.
வைரமுத்து வரிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. புன்னகை பூவே, முத்தம் முத்தம், ஜோதி நிரஞ்சவ, ஒரு பார்வை பார், பூவே வாய் பேசும்போது என ஒவ்வொரு பாடல்களும் வேற லெவலில் இருந்ததோடு, அப்போது எஃப்எம்களில் அதிகமாக ஒலிக்கப்பட்டன.
படத்தின் வித்தியாச திரைக்கதை ரசிகர்களை ஈர்த்திருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலை குவிக்காமல் ஒரு சராசரி ஹிட் படமாகவே இருந்தது 12பி. என்னதான் ஹிட் லிஸ்டில் சேராவிட்டாலும் ஷாமுக்கு என்ற ஹீரோவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதுடன், திரைக்கதை அமைப்பிலும் புதிய பாணியை உருவாக்கி கொடுத்த 12பி வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்