Parthiban: இவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? காசு வாங்கிட்டு கண்டதையும் பேசுறாங்க... கடுப்பான பார்த்திபன்
Sep 22, 2024, 05:12 PM IST
Parthiban: சினிமா விமர்சகர்கள் பலருக்கும் சினிமாவைப் பற்றி தெரிவதில்லை. இங்கு பலரும் விமர்சனங்களுக்கு காசு வாங்கிக் கொண்டு தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர் என இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இருந்த சினிமா இன்று பல்வேறு பரிமாணங்களை எடுத்து வளர்ச்சி கண்டுள்ளது. மனிதர்களின் வாழ்க்கை முறை, கலை வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சாதிய அடக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள், அறிவியல் புரட்சி, காதல் என பல கட்டங்களில் சினிமா முன்னேறியுள்ளது. அதற்கு தகுந்தாற் போல பார்வையாளர்களும் மாறி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு சினிமாவால் எப்போதும் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும், ஆசைகளையும் நிறைவேற்ற முடியாது. அதுமட்டுமன்றி, சினிமா என்பது தற்போது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டும் அல்ல. அது பலரின் உழைப்பு, பலரின் உணர்ச்சி வெளிப்பாடு.
இதை இயக்குநரின் பார்வையிலேயே அனைவரும் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், அவர் தரப்பு நியாயங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். ஒரு சினிமா என்பது குறைந்தபட்சம் 200 பேரின் உழைப்பு. அதனை குறை கூறுவது அந்த 200 பேரின் உழைப்பையும் குறை கூறுவது போன்றது.
அதுவும் சமீப காலங்களில் திரைப்படங்கள் மீதான விமர்சனங்கள் என்பது அந்தப் படத்தை தாண்டி, இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றி பேசுவதாக மாறிவிட்டது. இந்த நிலையில் தான் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், சினிமா விமர்சகர்கள் குறித்து தனது கேள்விகளை சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் முன்வைத்துள்ளார்.
அந்த நேர்காணலில், தற்போதுள்ள திரைப்பட விமர்சகர்கள் பற்றி நான் அதிக முறை சிந்தித்துள்ளேன். இவர்கள் எந்த கோணத்தில் படத்தை விமர்சிக்கிறார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. இவர்களுக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரிகிறது என்றே எனக்கு புரியவில்லை.
சினிமா கனவு
சினிமா கனவோடு வருபவர்களில் பாதி பேர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களுக்கு சினிமா குறித்த பார்வை ஒன்று இருக்கும். இவர்களில் பாதி பேருக்கு சினிமாவிற்குள் வந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். சிலபேர் ஒரு கேமராவை வைத்துக் கொண்டு சினிமா கனவோடு இருப்பார்கள். இவர்களுக்கு சினிமா பற்றி வேறு விஷயங்கள் தெரியும். ஆனால், இவர்களுக்கு ஒரு சினிமா எப்படி உருவாகிறது, எப்படி அது வெளியாகி மக்களை சென்றடைகிறது என்பது குறித்து எப்படி தெரியும்.
விமர்சகர்கள் பல விதம்
இண்டெர்நெட் வளர்ச்சிக்குப் பின் பல திரைப்பட விமர்சகர்கள் நமக்கு கிடைத்துள்ளனர். இவர்களில் சிலர் திரைப்படத்தை விமர்சனம் செய்வதை விடுத்து படத்தில் நடத்தவர்களை உருவக் கேலி செய்து வருகின்றனர். சிலரோ நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கின்றனர். சிலர் வெளியாகியுள்ள சினிமா குறித்து பாசிட்டிவ்வான கருத்துகளை கூறி பெரிய அளவில் பணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து பெறுகின்றனர். இதுபோன்ற விமர்சகர்களால் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையே குறைகிறது எனக் கூறியுள்ளார்.
டீன்ஸ் பட விமர்சனம்
விமர்சகர்கள் படத்திலுள்ள நிறை குறைகளை கூறலாம். நான் அனைத்து படத்தையும் பாராட்ட வேண்டும் எனக் கூறிவில்லை. நான் 13 குழந்தைகளை வைத்து டீன்ஸ் திரைப்படத்தை உருவாக்கினேன். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தனித்தனி கேரக்டர்களை கொண்டது. ஆனால், திரை விமர்சகர் ஒருவர் 13 குழந்தைகளும் ஒரே மாதிரி உள்ளதாக கூறியுள்ளார். இது மனதிற்கு மிகுந்த வலியை கொடுத்தசு என பார்த்திபன் தனது கவலையை அந்த நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக திரைப்படங்களில் தனக்கென தனி பானி நடிப்பை செட் செய்து கேலி கிண்டல் கருத்துகளை ஒருசேர கொடுத்து மக்கள் மனங்களை கவர்ந்து வந்தவர் நடிகர் பார்த்திபன். பின்னர், சினிமாவில் அடுத்தடுத்த பரிசோதனைகளில் ஈடுபட எண்ணி சில படங்களை எடுத்து அதனை உலகளவில் கொண்டு சென்று வருகிறார்.
உதாரணமாக இவரது ஒத்த செருப்பு படம் முழுவதிலும் பார்த்திபன் முகம் மட்டுமே பார்வையாளர்களுக்கு தெரியும் படி இருக்கும். இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரே மான்டேஜில் படம் மொத்தத்தையும் எடுத்து முடித்திருப்பார். இவ்வாறு பார்த்திபன் தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த பரிமாணங்களை தன்னுடைய படங்கள் மூலம் சோதித்து வருகிறார்.