Ilavarasu: ‘சமூக பொறுப்பு என்பதே டிராமா தான்’ இளவரசு ‘நச்’ பேட்டி!
Apr 17, 2023, 06:00 AM IST
‘தனி மனிதன் எல்லாம் தப்பா இருக்கும் போது, சமூகத்தை எப்படி கட்டமைக்க முடியும்? தனி மனித நாகரீகம் இருந்தால் போதும், சமூக பொறுப்பு என்று ஒன்றும் இல்லை’
ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, இன்று முன்னணி நடிகராக வலம் வரும் இளவரசு, பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த சுவாரஸ்ய பேட்டி இதோ:
‘‘என்னிடம் ஸ்கிரிப்ட் சொன்னார்கள் என்றால், நான் அதை படிக்க மாட்டேன். அதற்கு காரணம் என்னவென்றால் , படித்தால் நான் ஒரு மாடிலேஷனில் பிக்ஸ் ஆகிவிடுவேன். இயக்குனர் மாடிலேஷன் வேறு மாதிரி இருக்கும். அது அநாவசியமாகிவிடும். அதே நேரத்தில் இயக்குனர் மாடிலேஷன் கேட்டால், அதிலிருந்து மூளையில் ஒரு விசயம் உள்வாங்கும். என்ன தான் என்னுடைய உடல் மொழி இருந்தாலும், இயக்குனரின் தேவைக்கான ஒரு விசயம் உள்வந்துவிடும்.
இயக்குனர்களை நான் கவனிப்பேன். அவர்களின் ரியாக்ஷன் சரியில்லை என்றால், நானே ஒன்ஸ்மோர் கேட்பேன். அந்த கதாபாத்திரத்தை அவர் எவ்வளவு நாள் சுமந்திருப்பார்? அதை நம் பங்கிற்கு ஏதாவது செய்கிறோம் என கெடுத்துவிடக்கூடாது.
இதெல்லாம் ஏதோ தியாகம் என்று நினைத்து கெடுத்து விடக்கூடாது. அதுக்கு காரணம் , நான் தொழில்நுட்ப கலைஞரா இருந்த போது கதை கேட்டு, தயாரிப்பாளரை பார்த்து, எங்க வாழ்க்கைக்காக போராடும் போது, அன்றைக்கு இருந்த பொருளாதார சூழ்நிலை, மூன்று வேளை சாப்பாடு கூட கிடையாது.
வெளியே கதை சொல்ல பஸ் பிடிச்சு, ஓசி பைக் வாங்கி அவ்வளவு சிரமப்பட்டோம். 20 ரூபாய் பெட்ரோல் போடவே அவ்வளவு சிரமமா இருக்கும். தயாரிப்பு நிறுவனத்தில் வந்து கதை சொல்லிட்டு, அவங்க சாப்பிட சொல்வாங்க. அவங்க முன்னாடி கெத்தா வேணாம்னு சொல்லிட்டு வந்து, ஒரு டீ குடிச்சிட்டு வாழ்க்கையை ஓட்டினோம். எல்லாம் முடிச்சிட்டு, பசியோடு காது அடிச்சிடும், தயாரிப்பாளர் என்ன சொல்வாரோனு காத்துட்டு இருக்கிற வலி இருக்கே!
யாராவது என்னிடம் புதிதாக கதை சொல்ல வந்தால், எனக்கு அது தான் தோன்றும். நான் அவர்களை நிறைய எங்க்ரேஜ் பண்ணுவேன். என்னுடைய எங்க்ரேஜ் என்பது என்னுடைய தலையீடு எதிலும் இல்லாமல் இருப்பது தான்.
என்னுடைய அப்பா ஒரு பேராசிரியர். பேராசிரியர் அன்பழகனின் மாணவர் அவர். எங்கப்பா எம்.எல்.ஏ.,ஆக இருந்தாலும் எங்கள் வளர்ப்பு, வாத்தியார் வீட்டு பிள்ளையாக தான் இருந்தது. நான் 4வது படிக்கும் போது என்னுடைய அப்பா எம்.எல்.ஏ.,ஆக இருந்தார். என்னுடைய 15, 16வது வயதில் அப்பா முன்னாள் எம்.எல்.ஏ. ஆனால் திமுகவில் ஆக்டிவ் ஆக இருந்தார்.
நான் பத்தாம் வகுப்பு முடிக்கும் போது, எனக்கும் என் அப்பாவுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. நான் ஒரு டிஷைனில் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் நான் அப்படி இல்லை. இன்று என் பையனுக்கும் எனக்கும் அது வருது. என்னுடைய நண்பர்கள் எல்லாருமே இடதுசாரி சிந்தனையாளர்களாக இருப்பார்கள். அவர்களின் பழக்கம் எனக்கு வயதுக்கு மீறிய சிந்தனையை தந்தது.
எங்கப்பா எம்.எல்.ஏ.,ஆக இருந்த போது வந்தவர்கள், அவர் அந்த பதவியில் இல்லாத போது வரவில்லை. அப்போது, அவர்கள் வந்தது அந்த பதவிக்கு தான். அந்த புரிதல் எனக்கு சிறு வயதில் இருந்தது. இதனால், நான் ஒரு பெரிய இடம் என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இந்த சூழலே, எனக்கு தனியாக நடிப்புக்கு ஒரு பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவே எனக்கு பெரிய பயிற்சியாக இருந்தது.
கலைஞனுக்கு சமூக பொறுப்பு வேண்டுமா வேண்டாமா என்றால், அது என் தொழிலுக்காக நான் தேர்ந்தெடுக்க துறை. ஒரு மனிதனா மற்றவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பது தான் சமூக சிந்தனை. சமூக வலைதளம் வந்த பின், அதுக்கு தான் சமூக பொறுப்பு இருப்பது போன்ற வியாபாரத்தை கட்டமைத்துவிட்டார்கள். தனி மனிதர்களுக்கு அது புகட்ட வேண்டியதில்லை.
சமூக பொறுப்பு என்பது வியாபார மொழி. தனி மனிதன் எல்லாம் தப்பா இருக்கும் போது, சமூகத்தை எப்படி கட்டமைக்க முடியும்? தனி மனித நாகரீகம் இருந்தால் போதும், சமூக பொறுப்பு என்று ஒன்றும் இல்லை. கருத்து ஒத்து வந்தால் கேட்க வேண்டும், ஒத்து வரவில்லையா என்றால் அங்கிருந்து போய்விட வேண்டும். அவ்வளவு தான்,’’
என்று அந்த பேட்டியில் இளவரசு பேசியுள்ளார்.