53 Years of Rickshawkaran: சூப்பர் ஹிட் பாடல்கள்..எம்ஜிஆர் நடிப்பில் பட்டையை கிளப்பிய ரிக் ஷாக்காரன் ரிலீஸான நாள் இன்று!
May 29, 2024, 11:22 AM IST
53 Years of Rickshawkaran Movie: “ஏற்கனவே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக பேச்சு இருந்தது. ரசிகர்களும் இவர்களின் காம்பினேஷனை விரும்பவில்லை எனக் கூறி எம்.ஜி.ஆரின் மனதை மாற்றினார் ஆர்எம்வீ. ஜெயலலிதாவுக்குப் பதில் மஞ்சுளாவை ஒப்பந்தம் செய்தனர்.”
53 Years of Rickshawkaran Movie: தமிழ் சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். சில திரைப்படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத வகையில் ரசிகர்கள் மனதில் இடம்பெறுவது உண்டு. அந்த வகையில், நடிகர் எம்ஜிஆர் நடிப்பில் 1971 ஆம் ஆண்டு மே 29-ல் வெளியான திரைப்படம் தான் 'ரிக்ஷாக்காரன்'.
முதல் வண்ணப்படம்
ஒரு நடிகராக பல பரிமாணங்களில் பெரும் வெற்றிகளை தமிழ் சினிமா வரலாற்றில் கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். அந்த வகையில் எம்ஜிஆருக்கு பெரும் புகழைப் பெற்று தந்தது 'ரிக்ஷாக்காரன்'. கறுப்பு வெள்ளைப் படங்கள் அதிகம் வெளியாகி வந்த அந்த காலகட்டத்தில், பெரிய பட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் முதல் வண்ணப்படத்தை எம்ஜிஆரை வைத்து எடுக்க விரும்பின. அந்த வரிசையில் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் முதல் வண்ணப்படமாக வெளி வந்தது ‘ரிக் ஷாக்காரன்’.
ஜெயலலிதாவுக்குப் பதில் மஞ்சுளா
மஞ்சுளா இந்தப் படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். பத்மினி, ஜி. சகுந்தலா, அசோகன், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், சோ, ராமதாஸ், தேங்காய் சீனிவாசன் எனப் பலரும் நடித்திருந்தனர். கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் பத்மினி என முடிவானது. இன்னொருவர் ஜெயலலிதா என்பதில் எம்.ஜி.ஆர் பிடிவாதமாக இருந்தார். ஆனால், ஆர்.எம்.வீரப்பனுக்கு இதில் உடன்பாடு இல்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக பேச்சு இருந்தது. ரசிகர்களும் இவர்களின் காம்பினேஷனை விரும்பவில்லை எனக் கூறி எம்.ஜி.ஆரின் மனதை மாற்றினார் ஆர்எம்வீ. ஜெயலலிதாவுக்குப் பதில் மஞ்சுளாவை ஒப்பந்தம் செய்தனர்.
சூப்பர் ஹிட் பாடல்கள்
எம்எஸ்வியின் இசையில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அத்தனையும் சூப்பர் ஹிட். ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’, ‘கடலோரம் வாங்கிய காற்று’, ‘அழகிய தமிழ் மகள் இவள்’, ’பம்பை உடுக்கை கட்டி’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.
163 காட்சிகள்
சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் முதன்முதலாக 163 காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டது. அதிகபட்சமாக மதுரை நியூசினிமா அரங்கில் 161 நாட்கள் ஓடியது. அதுவரை இல்லாத சாதனையாக தமிழகம் முழுவதும் 51 நாளில் 50 லட்சம் ரூபாய் வசூலித்து எம்.ஜி.ஆரை ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று நிரூபித்தது ரிக்ஷாக்காரன். அதோடு மட்டுமல்லாமல் தேசத்தின் உயரிய விருதையும் எம்.ஜி.ஆருக்கு பெற்று தந்தது 'ரிக்ஷாக்காரன்'. ஆம், தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதுக்கு மத்திய அரசால் எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்கிற சிறப்பை எம்.ஜி.ஆருக்குப் பெற்றுத் தந்த படம் ‘ரிக் ஷாக்காரன்’.
53 ஆண்டுகள்
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த ‘ரிக் ஷாக்காரன்’ திரைப்படம் வெளியாகி (மே 29) இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆண்டுகள் பல கடந்தாலும் நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 53 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. மண்ணைவிட்டுப் மறைந்தாலும் என்றும் மக்களின் மனதை விட்டுப் பிரியாத மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதே நிதர்சனம். அந்த வரிசையில் சாமனியர்களின் இதயத்தில் ரிக் ஷாக்காரன் என்றும் அழியாத காவியம்தான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்