தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  12years Of Mankatha: ‘அரசியல் ஆக்கிரமிப்பில் சிக்கி.. ஆடாமல் ஜெயித்த மங்காத்தா’ ரிலீஸ் சிக்கலும், கொண்டாடிய மக்களும்!

12Years Of Mankatha: ‘அரசியல் ஆக்கிரமிப்பில் சிக்கி.. ஆடாமல் ஜெயித்த மங்காத்தா’ ரிலீஸ் சிக்கலும், கொண்டாடிய மக்களும்!

Aug 31, 2023, 07:30 AM IST

google News
‘படத்திற்கு போஸ்டர் இல்லை, இந்த நாளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு இல்லை. இரவு 10 மணிக்கு முடிவு செய்கிறார்கள், ‘நாளை படம் ரிலீஸ்’ என்று! (PREMGI Twitter)
‘படத்திற்கு போஸ்டர் இல்லை, இந்த நாளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு இல்லை. இரவு 10 மணிக்கு முடிவு செய்கிறார்கள், ‘நாளை படம் ரிலீஸ்’ என்று!

‘படத்திற்கு போஸ்டர் இல்லை, இந்த நாளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு இல்லை. இரவு 10 மணிக்கு முடிவு செய்கிறார்கள், ‘நாளை படம் ரிலீஸ்’ என்று!

12 ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில் தல அஜித் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்த நிகழ்வுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. முன்னணி நடிகர் படம் என்றால் கொண்டாடத் தானே செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதிலிருந்து மாறுபடுகிறது மங்கத்தா. 

வெங்கட் பிரபுவுக்கு அடித்த லக்!

சென்னை 28 முடித்த கையோடு, இயக்குனர் வெங்கட்பிரபுக்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் பாராட்டுகள் கிடைத்தது. அவ்வாறு கிடைத்த பாராட்டோடு, ஒரு பரிசும் கொடுத்தார் அஜித். ‘நாம ஒரு படம் பண்ணலாம் வெங்கட்’ என எடுத்த எடுப்பில் ஷாக் கொடுத்தார் அஜித்.

அப்படி உருவானத் திரைப்படம் தான் மங்காத்தா. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில், நடிகர் அஜித் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சமயம் அது. கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயா அழகிரியின் கிளைவுடு நைன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, மங்காத்தா உருவாகிறது என்கிற அறிவிப்பு வெளியான பிறகு தான், அஜித்-திமுக உறவில் விரிசல் இல்லை என்பதே ஊர்ஜிதமானது. 

ஆட்சி மாற்றத்தால் சிக்கல்

படம் முடிந்து வெளியாகும் சமயத்தில், ஆட்சி மாறிவிட்டது. முதல்வராக மறைந்த ஜெயலலிதா பொறுப்பேற்றார். கருணாநிதியின் குடும்பத்தார் கிட்டத்தட்ட தொழில் ரீதியாக சந்தித்த விமர்சனங்கள், திமுக ஆட்சியை இழக்க காரணம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்ட தருணம். 

அதில் அதிகம் பாதிக்கப்பட்டது மு.க.அழகிரியின் குடும்பம் தான். அந்த வகையில் கிளைவுடு நைன் நிறுவனமும் தப்பவில்லை. அரசியல் பின்னணி இருந்ததா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியின் கோபத்திற்கு ஆளாவோம் என்று மங்கத்தா படத்தை வினியோகிக்க பலரும் தயங்கினர். குறிப்பாக தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட் திரையுலகைச் சேர்ந்த பலரும், ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று யோசித்து பயந்தனர். 

மாறிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள்

அஜித் என்கிற முன்னணி நடிகரை வைத்து எடுத்தப் படம்; எப்படி வெளியிடாமல் இருக்க முடியும்? தன்னால் படத்திற்கு சிக்கல் வேண்டாம் என்று, தன் தம்பியான உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் மூலம் மங்கத்தா திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தார் தயா அழகிரி.

நாளிதழ் விளம்பரம் வெளியானது. ஆனால், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், அதே பிரச்னை தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் வெளியிடுவதாக அறிவிப்பு விளம்பரம் வந்தது. அதுவும் கை விடப்பட்டது. இப்படி ஆகஸ்ட் 15 சுதந்திரதின வெளியீடாக மங்காத்தா வரும் என்று எதிர்பார்த்த நிலையில், வெளியீடு பிரச்னையில் நாட்கள் கடந்தன. 

ஜெயலலிதா க்ரீன் சிக்னல்

விவகாரம் ஜெயலலிதாவிற்கே சென்றாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் குட் புக்கில் இருந்த நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ‘எனக்கு எந்த இஸ்யூவும் இல்லை.. ஏன் அஜித் படத்திற்கு ட்ரபிள் தர்றீங்க?’ என்று ஜெயலலிதா கூற, மங்காத்தா வெளியாக கிரீன் சிக்னல் கிடைத்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா படத்தை வாங்கி வெளியிட்டது. 

படத்திற்கு போஸ்டர் இல்லை, இந்த நாளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு இல்லை. இரவு 10 மணிக்கு முடிவு செய்கிறார்கள், ‘நாளை படம் ரிலீஸ்’ என. ஆகஸ்ட் 31ம் தேதி, எந்த பண்டிகையும் இல்லாத நாள். ‘பரவாயில்லை, அந்தம்மா மனசு மாறுவதற்குள் ரிலீஸ் பண்ணிடலாம்’ என இரவோடு இரவாக முடிவு செய்து, இப்போது மாதிரி அப்போது சமூக வலைதளம் கூட பெரிய அளவில் இல்லை. தியேட்டர்களுக்கு தான் தகவல் போகிறது. தவிர, சன்டிவியில் திடீர் அறிவிப்பு வெளியாகிறது. 

இரவோடு இரவாக அறிவிப்பு

ரசிகர்களுக்கு தீயாய் தகவல் பரவ, இரவோடு இரவாக டிக்கெட் முன்பதிவு நடந்து, மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது மங்காத்தா. போஸ்டர் இல்லாமல், விளம்பரம் இல்லாமல், ஏன்.. அறிவிப்பு கூட இல்லாமல் வெளியான ஒரே படம் தமிழ் சினிமா வரலாற்றில் மங்காத்தாவாக மட்டுமே இருக்க முடியும். 

இல்லாத விழாவை உருவாக்கிய அஜித் ரசிகர்கள்

ஆகஸ்ட் 31ம் தேதி எந்த விழாவும் இல்லை, ஆனால், தியேட்டர்கள் அனைத்தும் விழா கோலம் பூண்டது. அன்று தான் அஜித் எவ்வளவு பெரிய மாஸ் நடிகர் என்பது உலகிற்கு தெரியவந்தது. தரமான திரைக்கதை, அருமையான நடிப்பு, ஆர்ப்பாட்டமான இசை என மங்காத்தா மெகா ஹிட். இன்றோடு 12 ஆண்டுகளை கடக்கிறது. ஆனால், அதன் வரலாறு எப்போது கடந்து போக முடியாதது. ‘ஆடாம ஜெயிச்சோமடா..’ என்கிற பாடல் வரி அதில் வரும். உண்மையில் எந்த ஆட்டம் பாட்டமும் இல்லாமல் ஜெயித்த திரைப்படம் மங்காத்தா தான். ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய 50வது படம் மறக்க முடியாது. மங்கத்தா அஜித்தின் 50வது படம். இவ்வளவு பிரச்னையை தாண்டி வந்த போது, எப்படி மறக்க மடியும்?

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை