Cash Seized: சிக்கியது கட்டு கட்டாக பணம்..அமைச்சர் துரை முருகன் உறவினர் வீட்டு மாடியில் ஏறி குதித்து அதிகாரிகள் சோதனை!
Apr 08, 2024, 10:53 AM IST
அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டு மாடியில் ஏறி குதித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே காங்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ் என்பவர் வீடு அமைந்துள்ளது. இவர் அமைச்சர் துரை முருகனின் உறவினர் ஆவார். நடராஜ் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடராஜ் வீட்டுக்கு 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அந்த வீடு பூட்டி இருந்தது.
அதிகாரிகள் பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ், மண்டல துணை தாசில்தார் பிரகாசம், குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அந்த வீட்டுக் கதவை திறக்க அங்கேயே காத்திருந்தனர். இரவு 11.30 மணிக்கு மேலும் கதவை திறக்காததால் அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடி வழியாக சென்று அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது மொட்டை மாடியில் பணம் சிதறிக் கிடந்தது. மேலும், மாடியில் உள்ள ஒரு அறையில் ரூ.2.50 லட்சமும், தரைத்தளத்தில் இருந்த பீரோவில் ரூ.4.50 லட்சமும் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ரூ.7 லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முதியவர் பதில் எதுவும் அளிக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார். ஆனால், மூதாட்டி மாடியில் இருந்த பணம் என்னுடையது அல்ல; தரை தளத்தில் இருந்ததே என்னுடைய பணம்; தாலி மேல சத்தியமா என்னோட காசு என போலீசாரிடம் ஆவேசமாக கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நள்ளிரவில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட ரூ.3.98 கோடி பணம் தாம்பரம் சார்நிலை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 10 நாட்களுக்கு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்