Modi vs Stalin: 'முதலமைச்சரான என்னிடமே பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி!’ மு.க.ஸ்டாலின் வேதனை!
Mar 26, 2024, 08:34 PM IST
“வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இருக்கமாட்டார்கள் என்று கூறினார். அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டாரா? இல்லையே. பெயர் மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில் 60 விழுக்காடு பணம் மாநில அரசுதான் தர வேண்டும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அவமானமாக இல்லையா?”
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அவர்களே… நாங்கள் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஊர் சுற்ற வரவில்லை! எப்படி மக்கள் பணியாற்றவேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்? தலைவர் கலைஞர் அவர்கள்! எங்களுக்கு என்றால், தனிப்பட்ட எனக்கும் - கனிமொழிக்கும் மட்டுமல்ல; இங்கு மேடையில் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
அதனால்தான், அடிக்கடி சொல்கிறோம்; ஆமாம், நாங்கள் குடும்பக் கட்சிதான்! தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்கின்ற கட்சி! ஒவ்வொரு நாளும் காலை முதல் - இரவு வரை மக்களுடன் மக்களாக இருந்து, மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு இருக்கும் கட்சி! தமிழ்நாட்டை மொழி – இனம் - பண்பாட்டு ரீதியாக, ஒடுக்கப்பட்டதை எதிர்த்து உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த தமிழ்நாட்டை எப்படியாவது அடிமைப்படுத்திவிட முடியாதா? என்று பகல் கனவு காணும் உங்களின் தூக்கத்தைக் கெடுக்கும் கொள்கை வாரிசுகள் நாங்கள்! இப்படிப்பட்ட கொள்கை உரமிக்க தன்மானக் கூட்டத்தைப் பார்த்தால் உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும்!
அதனால்தான் இந்தத் தூத்துக்குடி மக்களின் பிரதிநிதியான கனிமொழியை, மேடையில் இருக்கும்போதே நீங்கள் அவமதித்தீர்கள். தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்று இல்லை… ஒரு பெண் என்றாவது மதித்தீர்களா? தூத்துக்குடி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றாவது மதித்தீர்களா? உண்மையில் நீங்கள் கனிமொழியை அவமதிக்கவில்லை, தூத்துக்குடி மக்களைத்தான் அவமதித்தீர்கள்!
ஜூன் 4-ஆம் தேதி பாருங்கள்… கனிமொழியை மீண்டும் தூத்துக்குடி மக்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பத்தான் போகிறார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பா.ஜ.க. அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தூத்துக்குடி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது எது? துப்பாக்கிச் சூடு! 13 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா? அப்படியொரு மனிதநேயமற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்தான் பழனிசாமி! தமிழ்நாட்டு வரலாற்றில் அ.தி.மு.க. ஆட்சியால் வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி. துயரமும் - கொடூரமுமான அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.
2018-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் உடனடியாகத் தூத்துக்குடிக்கு வந்தேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் – மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் காட்சி, இப்போதும் என் மனதை விட்டு அகலவில்லை. இரத்தத்தை உறைய வைக்கும் இந்தச் சம்பவம் பற்றி அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, என்ன கூறினார்? “இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது. உங்களைப்போல் நானும் டி.வி. பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்” என்று துளிகூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் பழனிசாமி பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்கவே முடியாது.
”உள்துறையைக் கையில் வைத்திருந்த மாநிலத்தின் முதலமைச்சர் பேசும் பேச்சா அது?” என்று நாடே கோபத்தில் கொந்தளித்தது. அந்தளவுக்குப் பெரிய பொய்யை கூறினார் பழனிசாமி. ஒரு பழமொழி கூறுவார்கள்… 'கடப்பாரையை முழுங்கிவிட்டு - கசாயம் குடித்துவிடுவார்கள்' என்று! அந்தளவிற்குப் பெரிய பொய்யைப் பழனிசாமி அன்று கூறினார். அவர் கூறியது எவ்வளவு பெரிய பொய் என்று அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே கூறிவிட்டது. நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பழனிசாமி கூறியது பொய் என்று தெளிவாக வந்துவிட்டது.
‘பச்சைப்பொய் பழனிசாமி’ என்று மக்கள் சும்மாவா சொன்னார்கள்! பழனிசாமிக்குத் தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஆணையம் ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது. ஆணையத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டவர்கள் யார் தெரியுமா? அப்போது இருந்த தலைமைச் செயலாளர்! அடுத்து, சட்டம்-ஒழுங்கு பொறுப்பிலிருந்த அப்போதைய டி.ஜி.பி.! அன்றாட நிகழ்வுகளை முதலமைச்சருக்கு சொல்லும் அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி.! இப்படி அரசின் உயர் பொறுப்புகளில் இருந்த அனைவரும் கூறிய சாட்சியத்தை வைத்துத்தான், பழனிசாமிக்கு தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்று ஆணையம் உறுதி செய்தது!
தூத்துக்குடியில் நடக்கின்ற சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் அப்டேட் செய்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாகப் பழனிசாமி கூறியது தவறானது என்று ஆணையத்தின் அறிக்கையில் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
இவ்வாறு, பழனிசாமியின் பொய்யை அம்பலப்படுத்திய ஆணையம், தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டதல்ல! அ.தி.மு.க. ஆட்சியில் பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதே அமைக்கப்பட்டது! தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நம்முடைய கழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.
கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெற்றோம். போராட்டத்தின்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அவர்களும் - அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அனுபவித்த மன வேதனைகளின் பொருட்டு 1 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு இறந்த திரு. பரத்ராஜ் என்பவரின் தாயாருக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. திரும்பப் பெறத் தகுதியுள்ள 38 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகத் "தடையில்லாச் சான்றிதழ்" வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இது எல்லாவற்றிற்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் – 26.05.2021 அன்றே உத்தரவிட்டோம்.
தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 நபர்களுக்கு, கடந்த ஆட்சியில் கண்துடைப்பாகச் சில பணிகள் வழங்கப்பட்டது. அவர்கள் தங்களின் படிப்புத் தகுதிக்கு ஏற்ற பணிகளைக் கேட்டார்கள். அதை நிறைவேற்றிக் கொடுத்ததும் தி.மு.க. அரசுதான்! அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியிடங்கள் 18 நபர்களுக்கு வழங்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேல், இந்தத் துயரங்களுக்கு எல்லாம் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகத் திறக்க முடியாதபடி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை முன்வைத்து வெற்றி கண்டது, நம்முடைய திராவிட மாடல் அரசுதான்!
ஒரு ஆட்சி நிர்வாகம் ஈவு இரக்கமில்லாமல் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சி! ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் வாழ்க்கையில், ஒளி வீசும் உதயசூரியனாக இருக்கிறதுதான் நம்முடைய தி.மு.க. ஆட்சி! இந்தத் திராவிட மாடல் ஆட்சி!
மக்கள் விரோத ஆட்சி நடத்திய பழனிசாமி, தன் ஆட்சி அவலங்களை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார். மக்களை ஏமாற்ற மீண்டும் அவர் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னால் திருச்சியில் பேசிய பழனிசாமி, எனக்கு இரண்டு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
ஒன்று, தி.மு.க.வுக்கும் - அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டி என்று கூறியிருக்கிறார். அந்தளவிற்காவது பழனிசாமிக்குப் புரிதல் இருக்கே என்று, எனக்கு முதல் மகிழ்ச்சி!
பழனிசாமி அவர்களே… களத்தில் மோதுவோம்! எங்கள் சாதனைகளையும் - உங்கள் துரோகங்களையும் எடைபோட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும்! எங்கள் கொள்கைகள் எப்படி உயர்வானது! அந்தக் கொள்கைகளுக்காக நாங்கள் எப்படி உறுதியுடன் நிற்கிறோம்! கொள்கை அடிப்படையில் ஆட்சி நடத்தி, திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பார்க்கிறார்கள்…
அதேபோல், பழனிசாமி என்பவர் யார்? நேற்று யாருடன் இருந்தார்; இன்றைக்கு யாருடன் இருக்கிறார்; நாளைக்கு யாருடன் இருப்பார்; சுயநலத்தின் முழு உருவமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி அடகு வைத்தார்; நேரத்திற்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் தவழ்ந்து… தவழ்ந்து பழனிசாமி போராடுவார் என்று மக்கள் எடைபோட்டுத் தீர்ப்பளிப்பார்கள்!
எப்படி என்னைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி, விமர்சித்துப் புடம் போட்ட தங்கமாக - எஃகுபோல் நெஞ்சுறுதி கொண்டவனாக மாற்றியிருக்கிறார்களோ – அதேபோல், இப்போது தம்பி உதயநிதியையும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார். இது இரண்டாவது மகிழ்ச்சி!
பழனிசாமி அவர்களே… எங்களைத் தொடர்ந்து விமர்சியுங்கள்! வரவேற்கிறோம்! விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக இருந்தால், சொல்வது யார் என்று பார்க்கமாட்டோம்… பயனடைவது மக்கள் என்று செயலாற்றுவோம்… இதுதான் தி.மு.க.!
நடப்பது நாடாளுமன்றத் தேர்தல்! கடந்த பத்தாண்டுகளில் நாட்டை நாசப்படுத்திப் படுகுழியில் தள்ளியிருப்பது பா.ஜ.க.! எந்த பா.ஜ.க.? ‘மோடிதான் எங்கள் டாடி‘ என்று பாதம்தாங்கிளாகத் தூக்கி தலையில் சுமந்தீர்களே அந்தப் படுபாவி பா.ஜ.க.! எந்த பா.ஜ.க.? தங்களுக்கு எதிரான ஓட்டுகள் பிரிய வேண்டும் என்று உங்களுக்கு ஸ்க்ரிப்ட் கொடுத்துள்ளதே அந்த பா.ஜ.க.! அந்த பா.ஜ.க.வைக் கண்டித்து விமர்சித்து ஒரு வார்த்தைகூட உங்களிடமிருந்து வரவில்லையே? எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா?
பழனிசாமி அவர்களே… உங்களுக்கு, முன்னாள் - இந்நாள் கிடையாது… எந்நாளும் பா.ஜ.க.தான் எஜமானர்கள்… நீங்கள் அவர்களின் பாதம்தாங்கிகள்… மனமுவந்து தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கொள்கையற்ற கூட்டம் நீங்கள்! மோடியைப் பற்றி பாசாங்கிற்காககூட பத்து சொற்களை பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான், தமிழ்நாட்டைக் காப்பாற்ற போகிறாராம்; உரிமைகளை மீட்கப் போகிறாராம்.
பழனிசாமி அவர்களே… அனைத்து உரிமைகளையும் அடகு வைத்தது நீங்கள்தான்! உங்களுக்கு இதையெல்லாம் கூற அருகதை இருக்கிறதா?
இப்படி பாதம்தாங்கி பழனிசாமி ஒரு பக்கம் என்றால்… அவரின் ‘ஓனர்’ மோடி மற்றொரு பக்கம் வந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில்தான் மோடி அவர்களைத் தமிழ்நாட்டுப் பக்கம் பார்க்க முடியும். சில நாட்களுக்கு முன்னால், கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் – கைது செய்யப்படுவதற்கும், தி.மு.க.வும் – காங்கிரசும்தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
“நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார் – கைது செய்யப்பட மாட்டார்” என்று மார்தட்டினாரே மோடி? ஆனால், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, இராமநாதபுரம் – தூத்துக்குடி என்று பல்வேறு மாவட்ட மீனவர்களுக்குச் சிறைத் தண்டனை, படகுகள் பறிமுதல், படகுகள் நாட்டுடைமை, கடும் அபராதம், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது என்று, தமிழ்நாட்டு மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படை அறிவிக்கப்படாத ஒரு போரை நடத்துவது மோடி ஆட்சியில்தான்!
பிரதமர் மோடி அவர்களே… இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது யார்? நீங்கள்தானே! தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தட்டிக் கேட்க நீங்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா? கதறி அழுவது தமிழ்நாட்டுப் பெண்கள் என்பதாலா? குஜராத் மீனவர்கள்மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினால், சிறையில் அடைத்தால், படகுகளை நாட்டுடைமை ஆக்கினால் இப்படிதான் அமைதியாக இருப்பீர்களா? நீங்கள்தான் பெரிய விஸ்வகுருவாயிற்றே! இலங்கையை உங்களால் கண்டிக்க முடியாதா? நீங்கள் விஸ்வகுருவா? இல்லை மவுனகுருவா? பதில் கூறுங்கள் மாண்புமிகு மோடி அவர்களே… பதில் கூறுங்கள் என்று நான் மட்டும் கேட்கவில்லை… தூத்துக்குடி - இராமேஸ்வரம் மீனவர்கள் மட்டும் கேட்கவில்லை… ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மீனவர்களும் கேட்கிறார்கள்!
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாம்பனில் பா.ஜ.க. சார்பில் 'கடல் தாமரை' என்று ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராக இருந்த அம்மையார் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இங்கு வந்திருந்தார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதெல்லாம் பத்தாண்டு காலத்தில் நடந்திருக்கிறதா? “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடக்கிறது. இதற்குக் காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம் என்று இராமநாதபுரத்தில் வைத்துதான் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள் கூறினார்.
மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான ஒன்றிய அரசு அமைய வேண்டும் என்று கூறினார். மீனவர்கள் வாழ்வு சிறக்க சபதம் எடுப்பதாகக் கன்னியாகுமரியில் கூறினார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட உயிரிழக்க மாட்டார்கள்” என்று கூறினார். தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டாரே, அது யார் ஆட்சியில்? மீனவர்கள்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதே, அப்போது நீங்கள்தானே பிரதமர்? மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் - என்று நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே… அப்போது வேடிக்கை பார்த்த பிரதமர் யார்? நீங்கள்தானே! தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பா.ஜ.க. ஆட்சியில்தானே! இல்லையென்று ஆதாரப்பூர்வமாக மறுக்க முடியுமா? விஸ்வகுரு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் நீங்கள்… தமிழ்நாட்டு மீனவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லையே? எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மீனவர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்?
தமிழ்நாட்டு மீனவர்களைக் காப்பாற்ற தவறிய பிரதமர் மோடி, திசைதிருப்பும் எண்ணத்துடன் எங்கள் மேல் குறை சொல்கிறார். ஒரு பிரதமர் வாக்கு கேட்டு வருகிறார் என்றால், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும். மாறாக, பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைத் திட்டுவதில் நேரத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் தரலாம் என்று கூறினாரே! கொடுத்தாரா? 15 ஆயிரமாவது கொடுத்தாரா? இல்லையே! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், சுருக்குப் பையில் இருக்கும் பணத்தைகூட எப்படி உருவ வேண்டும் என்றுதான் திட்டம் போடுகிறார்!
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று கூறினாரே! எங்கே அந்த வேலைவாய்ப்புகள்? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இப்போது மோடி ஆட்சியில்தான் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. உழவர்களின் வருமானம் இரண்டு மடங்கு ஆகிவிட்டதா? உழவர்களின் வாழ்வாதாரத்தையே பாழாக்குகிற மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளைத் தலைநகர் எல்லையில் போராடவிட்டு, அவர்கள் வெயிலிலும் - மழையிலும் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டீர்கள். ஏதோ எதிரிகள் நம் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததைப்போல் தாக்குதல் நடத்துகிறீர்கள். விவசாயிகளை எதிரிகள் போல் நடத்துவதுதான் மோடி மாடலா?
அடுத்ததாக ஒன்று கூறினார். வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இருக்கமாட்டார்கள் என்று கூறினார். அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டாரா? இல்லையே. பெயர் மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில் 60 விழுக்காடு பணம் மாநில அரசுதான் தர வேண்டும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அவமானமாக இல்லையா? இதுனால்தான், ”வாயாலேயே வடை சுடுவார் மோடி” என்று சொல்கிறோம்.
தமிழ்நாட்டிற்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையாவது மோடி நிறைவேற்றியிருக்கிறாரா? 2014-ஆம் ஆண்டு இராமநாதபுரத்திற்கு வாக்கு கேட்டு வந்த மோடி அவர்கள் என்ன கூறினார்? மிகப்பெரிய புண்ணியத் தலமான இராமேஸ்வரம், சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, உலகத்தினர் அனைவரும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். இராமேஸ்வரத்தை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றிவிட்டார்களா?
மீண்டும் தனுஷ்கோடிக்கு இரயில் பாதை அமைக்க 2019 மார்ச் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாரே? அதன், இன்றைய நிலை என்ன? இராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே 17 கிலோ மீட்டர்தானே தூரம்? ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதே… 17 கிலோ மீட்டருக்குப் பாதை அமைக்க முடியாதா? பிரதமர் மோடி அவர்களே… இராமேஸ்வரத்திற்கும் - தனுஷ்கோடிக்கும் தூரம் இல்லை… உங்கள் மனதிற்கும் - தமிழ்நாட்டிற்கும்தான் ரொம்ப தூரம்!
இப்படி தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல், தமிழ்நாட்டிற்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், அவர் கொண்டுவரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருந்தேன் என்று கூறுகிறார். அவர் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்? தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புத் திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று நானும் நாள்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்… ஒரே ஒரு சிறப்புத் திட்டத்தைக்கூட பத்தாண்டுகள் பிரதமராக இருந்த மோடியால் கூற முடியவில்லை.
ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றுக் கொண்ட இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களை சொல்லட்டுமா?
திராவிட மாடல் அரசு என்பது, தமிழ்நாட்டு மக்களின் அரசு! பெருந்தலைவர் காமராசரின் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடும் அரசு! அதன் அடையாளமாகத்தான், பெருந்தலைவர் காமராசர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதுபோல், காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது என்று, காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சிறிது நாட்களுக்கு முன்னால், எனக்கு ஒரு அஞ்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால், அதில் 50 கடிதங்களுக்கு மேல் இருந்தது. அனைத்துமே இராமநாதபுரம் மாவட்டம் - சாயல்குடியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் எனக்கு அனுப்பிய கடிதங்கள். காலை உணவுத் திட்டத்தால் பசியில்லாமல் தெம்பாக, உற்சாகமாக படிக்க முடிகிறது என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியதற்கு நன்றி என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்கள். முதலில் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதால் மேலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் வயிறார சாப்பிடுகிறார்கள். பணிச்சுமை குறைந்ததால் பெற்றோரும் மனதார வாழ்த்துகிறார்கள்.
அடுத்து, பெண் பிள்ளைகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்!
ஆண் மாணவர்களுக்கும் மாதா மாதம் 1000 ரூபாய் வழங்க இருக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம்!
இளைஞர்களுக்கு, திறன்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தரும், நான் முதல்வன் திட்டம்!
இப்படி, பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வரை, போற்றும் பல திட்டங்களை நிறைவேற்றுவதுதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி! கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடையும் வகையில், மிகவும் கவனமாகத் திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அதில் முக்கியமானது, ’கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்‘! எங்கள் தாய்வீட்டுச் சீர் மாதிரி, எங்கள் அண்ணன் ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தருகிறார் என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!
சமீபத்தில், திருப்பூரில் ஒரு சகோதரி பேசும் வீடியோவைப் பார்த்தேன்... அதில் சொல்கிறார்கள், டெய்லரிங் சென்றுதான் சம்பாதிக்கிறேன்... என்னுடைய வருமானத்தில் ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைத்த மாதிரி இருக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறினார்... இந்த ஆயிரம் ரூபாய் மளிகை வாங்க, குழந்தைகளுக்கு மருந்து மாத்திரை வாங்க, மாத கடைசியில் சிலிண்டர் வாங்க என்று தங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிகரமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் பேசினார்கள்!
இன்னும் இருக்கிறது, நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் சந்தோஷமாக, நாங்கள் ஸ்டாலின் அய்யா பஸ்சில், இலவசமாக பயணம் செய்கிறோம் என்று சொல்லும், ‘விடியல் பயணம் திட்டம்‘!
வெளியூரில் வேலைக்குச் செல்லும் மகளிர் தங்குவதற்கு, ’தோழி விடுதி’ என்று ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.
இந்த திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிறது என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் கூறுவேன்!
நம்முடைய திராவிட மாடல் அரசின் கொள்கை என்ன? “எல்லார்க்கும் எல்லாம்”, “அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி”. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நான் வந்து, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ‘வின் ஃபாஸ்ட்‘ நிறுவனத்தின் தொழிற்சாலைக்காக அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தூத்துக்குடி சிப்காட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படவிருக்கும் இந்தத் தொழிற்சாலையால், முதல்கட்டமாக நான்காயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது! தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கப் போகிறது!
இப்படி மக்களுக்கான நலத்திட்டங்களையும் - சாதனைகளையும் ஒவ்வொரு நாளும் செய்த அந்த துணிச்சலுடன்தான் இந்த ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்‘ உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். சும்மா அல்ல, தெம்போடு, துணிச்சலோடு நிற்கிறேன். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நிற்கிறேன்.
நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம்… அந்த அறிக்கையைத் தயார் செய்வதற்குத் தலைவர் யார் தெரியுமா? உங்கள் எம்.பி.தான். கனிமொழிதான் தலைவராக இருந்து அந்த அறிக்கையைத் தயாரித்துத் தலைமைக்குக் கொடுத்தார். அதில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்…
மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் பத்தாண்டுகளாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாவும், ஊதியம் 400 ரூபாயாவும் உயர்த்தப்படும்.
உலர் மீன் முற்றங்கள் கட்டுதல் போன்ற மீனவர்களுக்குத் தேவையான தொழில் கட்டமைப்புப் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும்.
பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட, மீனாகுமாரி குழுவின் அறிக்கை கைவிடப்படும்.
மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு மாற்றுப் பொருளாதார வேலைவாய்ப்புகளை உருவாக்க, மீனவக் குடும்ப உறுப்பினர்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, மீன்கள் பதப்படுத்துதல், மீன் வளர்ப்பு, மீன் தீவனம் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
மீனவ சமுதாய மக்களை அவசர காலத்தில் பாதுகாக்க ‘ஹெலிகாப்டர் தளம்‘ தேவையான இடங்களில் அமைக்கப்படும்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை சீர்திருத்தப்படும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு எளிய முறையில் உரிமங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அதுமட்டுமல்ல, தூத்துக்குடி விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாகத் தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
முத்துநகர் விரைவு இரயில் சேவை போல, சென்னை செல்ல மேலும் ஒரு இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
தூத்துக்குடி - வி.எம்.எஸ். நகரில் ஐந்தாவது இரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும்.
காயல்பட்டினம் மற்றும் மீளவிட்டான் இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
தூத்துக்குடியில் உற்பத்தியாகும் பனை பொருட்களுக்கு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும்.
இராமநாதபுரம் மாவட்டம் - பிரப்பன்வலசை இரயில்வே வழித் தடத்தைக் கடக்க, சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.
தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் “சொல்வதைச் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்!” இதுதான் வரலாறு! இந்த வரலாறு தொடர, வாக்குறுதிகள் நிறைவேற, நீங்கள் அனைவரும் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அப்போதுதான் பா.ஜ.க. எனும் பேரிடரிலிருந்து இந்தியா விடுதலை அடைய முடியும்! பா.ஜ.க.வை ஏன் பேரிடர் என்று சொல்கிறோம்? நெல்லை – தூத்துக்குடியில் வெள்ளம் வந்ததே! அதற்கு நிவாரணம் கேட்டுக் கோரிக்கை வைத்தோமே! பிரதமர் கொடுத்தாரா? தூத்துக்குடியில் மழை வெள்ளம் ஏற்பட்டதும் இங்கு களத்திலிருந்து மக்களுக்கு உதவியது யார்? தங்கை கனிமொழியும், அமைச்சர் கீதா ஜீவனும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும்தானே மக்களுடன் மக்களாக இருந்து நிவாரணப் பணிகளைச் செய்தார்கள்.
இவர்கள் மட்டுமா? ஒட்டுமொத்த அமைச்சரவையுமே இங்குதானே இருந்தார்கள்… ஓடோடி வந்து உதவி செய்தார்கள்... நானும் உடனடியாக இங்கு வந்து உதவினேன்… களத்தில் இருந்தவர்களின் உழைப்பால்தானே இயல்பு நிலை விரைவாக திரும்பியது. தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் வாய்கால்களில் ஏற்பட்ட உடைப்புகளைச் சரிசெய்ய 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கியிருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தூத்துக்குடிக்கு வந்து நிதி உதவியை வழங்கியதும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்! இது எல்லாமே தமிழ்நாடு அரசின் மாநில நிதியிலிருந்து செய்து தரப்படுகிறது. இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடரை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கோரினோம். ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை. ஆனால், அதை ஒரு காரணமாக நாங்கள் மக்களிடம் கூறவில்லை. மோடி தரவில்லை என்றால் என்ன? உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தருவேன் என்ற உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றினேன்.
வெள்ளம் பாதித்தபோது, டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. தொலைபேசியில் என்னிடம் பேசிய பிரதமர் மோடி என்ன கூறினார் தெரியுமா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி இருக்கிறேன், அவர் பார்வையிட்ட பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். ஆனால், நிர்மலா சீதாராமன் வந்துவிட்டு சென்றார். கொடுத்தாரா? கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அங்குச் சென்று என்ன சொன்னார்? மக்களுக்கான உதவிகளைப் பிச்சை என்று மனசாட்சியே இல்லாமல் ஆணவத்துடன் கொச்சைப்படுத்தினார்.
பிரதமர் பதவியில் இருப்பவர் கூறினாரே என்று நம்பினேன். வழக்கமாக, மக்களுக்குக் கூறும் பொய்யைத்தான் எனக்கும் பரிசாகக் கொடுத்தார். மக்களால் முதலமைச்சரான என்னிடமே பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி! பொய்களை மட்டுமே பரிசாகத் தரும் பிரதமருக்கு, ஏமாற்றத்தைப் பரிசாக தர தயாராகிவிட்டீர்களா? தமிழ்நாட்டு வழியில் ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகிவிட்டது! மோடிக்கான தோல்விப் பரிசு தூத்துக்குடியிலும், இராமநாதபுரத்திலும் தயாராகிவிட்டதுதானே?
அதற்கு, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் – என் அன்புத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர். இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் சகோதரர் நவாஸ் கனி அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ஜனநாயகத்தைக் காக்கட்டும்! இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காக்கட்டும்! அரசியல் சட்டம் கொடுத்துள்ள சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி என அனைத்தையும் காக்கட்டும்! மொத்தத்தில் உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கட்டும்! உங்கள் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த – இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!