Modi vs MK Stalin: ’நிதி தராத ஒன்றிய அரசு மீது வழக்குத் தொடர்வேன்!’ முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
Mar 25, 2024, 08:47 PM IST
”பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் - ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக வாழும் இந்தியாவை, வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள்! அதை மனதில் வைத்து, அமைதியான – வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்”
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி – ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி – விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – தாரகை கத்பெர்ட் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வீரத்தின் விளைநிலமாக இருக்கும் திருநெல்வேலி சீமைக்கு வந்திருக்கிறேன்! வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கு 133 அடியில் வானுயர சிலையைத் தலைவர் கலைஞர் அமைத்த தென்குமரி முனைக்கு வந்திருக்கிறேன்!
குமரி முதல் இமயம் வரை என்று சொல்வோம்! அப்படிப்பட்ட பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டில் ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் வெற்றி பெற உங்கள் ஆதரவைக் கேட்டு நான் வந்திருக்கிறேன்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பெர்ட் களம் காண்கிறார். பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமனின் பேத்தி இவர். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த, மதச்சார்பின்மை மேல் பற்றுகொண்ட வேட்பாளராக உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக இங்கு இருக்கும் தம்பி விஜய் வசந்த் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வரும் ரிப்போர்ட்களில், “கன்னியாகுமரி எம்.பி. - விஜய் மிகவும் நன்றாகச் செயல்படுகிறார். தொகுதி மக்களுக்காகக் கடுமையாக உழைக்கிறார்” - என்று சொல்கிறார்கள்!
அப்போது என் மனதில் என்ன தோன்றுமென்றால், ”தம்பி விஜய் வசந்துக்கு உழைக்கச் சொல்லித் தர வேண்டுமா? யாருடைய மகன்… உழைப்பால் உயர்ந்து, இங்கிருக்கும் நாங்குநேரி மக்களுக்காகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, இதே கன்னியாகுமரி மக்களால் தங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய வாரி வழங்கும் குணத்தால் இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் வசந்தகுமார் அவர்களின் மகன் அல்லவா!
உங்களுக்காக உழைக்க அவர் கன்னியாகுமரியில் மீண்டும் களம் காண்கிறார். கடந்த தேர்தலைவிட இன்னும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
திருநெல்வேலியில் போட்டியிடும் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் மாவட்டக் காங்கிரஸ் தலைவராக மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை வளர்த்த பெருமைக்குரியவர். தென்னிந்தியத் திருச்சபை மூலமாகச் சமூகத் தொண்டும் ஆற்றி வருபவர். இவர்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது உங்கள் தொகுதிக்கான எம்.பி.-யைத் தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல.
நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வருவதை உறுதிசெய்யப் போகிறது! உங்கள் வாக்குதான் மனிதநேயமிக்க ஒருவரைப் பிரதமர் பொறுப்பில் உட்கார வைக்கப் போகிறது!
தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால், அது உங்கள் ‘கை’யில்தான் இருக்கிறது. அதற்கு, பிரதமர் நரேந்திர மோடியைத் தோற்கடித்தாக வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா - அமளியான இந்தியாவாக மாறிவிடும்.
அதற்கு சமீபத்திய உதாரணம், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம். அந்த மாநில மக்கள், என்னென்ன கஷ்டப்பட்டார்கள்! சொந்த நாட்டிலேயே அகதிகள் மாதிரி வாழ்ந்தார்கள்! நம்முடைய எம்.பி.-க்கள் குழு சென்று பார்த்தபோது, தாய்மார்கள் கதறினார்களே… அதையெல்லாம் மறக்க முடியுமா?
அதனால்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் - ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக வாழும் இந்தியாவை, வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள்!
அதை மனதில் வைத்து, அமைதியான – வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னால், குமரிக்கும் – திருநெல்வேலிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். தேர்தல் வந்துவிட்டது என்று இப்போது அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே…
வெள்ளம் வந்தபோது எங்கு இருந்தீர்கள்… இரண்டு இயற்கைப் பேரிடர்! அடுத்தடுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும் - தென் மாவட்டங்களையும் தாக்கியது…
பிரதமர் மோடி அவர்களே… ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா? இல்லையே! நிதிதான் தரவில்லை… ஓட்டு கேட்டு வந்தபோது மக்களுக்கு ஆறுதல் வார்த்தையாவது கூறினீர்களா? ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்குச் செய்ய வேண்டியதை – தர வேண்டியதை – உதவ வேண்டியதை - உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டோம்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் – கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, மனோ தங்கராஜ் என்று, எல்லோரையும் இங்கே அனுப்பி வைத்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சைகள் அளிக்க, தொற்று நோய் எதுவும் வராமல் இருக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டேன்.
அதேபோல, உழவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைக் களத்திற்கு அனுப்பினேன்.
தமிழ்நாட்டின் மொத்த அமைச்சர்களும் இங்கு வந்து தங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். மக்களோடு மக்களாக கூடவே இருந்து, ஆறுதல் கூறி, என்ன தேவைகள் என்று கூடவே இருந்து, வேண்டியதை செய்து கொடுத்தார்கள்.
நானும், டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினேன்.
கடந்த பிப்ரவரி 25 அன்று, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 38 ஆயிரத்து 614 பேருக்கு, 118 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ”கை”தான், இந்தக் ”கை”.
ஒன்றிய அரசிடம் என்ன கேட்டோம்? ”மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்… அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று, இரண்டு இயற்கைப் பேரிடர்களுக்கான இழப்பீடு – மறு சீரமைப்பு – நிவாரணத் தொகையாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். தொடர்ந்து கேட்கிறோம்… தந்தார்களா? இல்லை.
நாம் உரிமையோடு கேட்பதைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன்.
சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்டத்துக்குக் கையெழுத்து போடச் சொல்லுங்கள் என்று நீதிமன்றம் சென்றோம்.
பொன்முடி அவர்களை மீண்டும் அமைச்சராக்க வலியுறுத்த நீதிமன்றம் சென்று வென்றோம்.
இப்போது நிதி கேட்டும் நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமென்றால், பா.ஜ.க. எத்தகைய, ஓரவஞ்சனையான அரசாக நடந்து கொண்டிருக்கிறது?
ஓரவஞ்சனை மட்டுமா செய்கிறார்கள்? நிதியையும் தராமல் நம்முடைய மக்களை ஏளனம் வேறு, செய்கிறார்கள். கேலி, கிண்டல் செய்கிறார்கள்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நிவாரண நிதியும் தரமாட்டார்களாம். மாநில அரசே மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் அதையும் ‘பிச்சை’ என்று ஏளனம் செய்வார்களாம்.
அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் அரசின் கடமை. அதைக் கேட்பது மக்களின் உரிமை. மக்களாட்சியில் மக்களையே அவமதித்தபோதே உங்களின் தோல்வி உறுதியாகிவிட்டது!
அம்மையார் அவர்களே… ஒரே ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள்… அப்போது தெரியும்… மக்கள் உங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று! அதற்குப் பிறகு, பிச்சை என்ற வார்த்தையே உங்கள் நினைவிற்கு வராது!
ஆட்சி இருக்கிறது… பதவி இருக்கிறது… என்று பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் ஆணவமாகப் பேசலாமா? அதிலும் ஒரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறினால், இன்னொரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் – பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டுகிறார்.
தமிழர்கள் மேல் ஏன் இத்தனை கோபம்! வெறுப்பு! வன்மம்! மக்களிடையே வெறுப்பை விதைத்து, பிளவுகளை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது!
மேம்பட்ட சிந்தனைகள் உள்ள நாம், நம்முடைய சகோதர –சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும்! பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம்