Lok Sabha Election Phase 3: மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்.. குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
May 07, 2024, 08:37 AM IST
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாக்களித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாக்களித்தார். நிஷான் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த பிரதமரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றார்.
வெள்ளை நிற குர்தா-பைஜாமா மற்றும் காவி நிற அரை ஜாக்கெட் அணிந்து, பிரதமர் மோடி அமித் ஷாவுடன் வாக்குச்சாவடிக்கு நடந்து சென்றார். அப்போது வண்டியை நிறுத்தி மக்களைப் பார்த்து கையசைத்து, தானே வரைந்த ஓவியத்திலும் கையெழுத்திட்டார்.
இதற்கிடையே, அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு இளம்பெண்ணுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். "இன்றைய கட்டத்தில் வாக்களிக்கும் அனைவரையும் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை மிகவும் துடிப்பானதாக மாற்றும்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு (மே 07) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.
அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ (2), கோவா (2), குஜராத் (25), கர்நாடகா (14), மகாராஷ்டிரா (11), மத்தியப் பிரதேசம் (8), உத்தரப் பிரதேசம் (10), மேற்கு வங்கம் (4) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 3ஆவது கட்டத்தில் மொத்தம் 1,352 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,229 பேர் ஆண்கள். 123 பேர் பெண்கள் ஆவர்.
1.85 லட்சம் வாக்குச்சாவடிகளில் மொத்தம் 17.24 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 23 கட்சிகளைைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதலில் 95 மக்களவைத் தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உயிரிழந்ததால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே 3-வது கட்டத்தில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இன்றைய தேர்தல் களத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் திக்விஜய் சிங், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் மற்றும் என்சிபி (சமாஜ்வாதி) தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் ஆவர்.
2019 பொதுத் தேர்தலில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 93 இடங்களில் 72 இடங்களை பாஜக கைப்பற்றி இருந்தது. மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இந்த கட்ட இறுதிக்குள் நிறைவடையும்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் அதே வேளையில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி அணி ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்