OPS: ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியதாக புகார்.. விடிந்ததும் ஓபிஎஸ்க்கு விழுந்த பேரிடி!
Mar 31, 2024, 09:38 AM IST
O Pannerselvan: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
இதற்கிடையில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் களமிறங்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனினும் அந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சுயேச்சை வேட்பாளர்களாக 6 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், ஓபிஎஸ் வெற்றி பெற கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், வாளி அல்லது திரட்சை சின்னத்தை கேட்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து இருந்த நிலையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வங்கள் வாளி மற்றும் திராட்சை சின்னங்களை கேட்டு வேட்புமனுத்தாக்கல் செய்து இருந்தனர். இதனால் சின்னங்களை சீட்டுப்போட்டு குலுக்கி வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலா பழம் சின்னம் கிடைத்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த பாஜக கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர். அப்போது, அவர்களுக்கு ஓபிஎஸ் பணம் வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விதிகளை மீறி ஆரத்திக்கு பணம் வழங்கியது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9