Kannaki Temple: மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்லும் ஒரே அம்மன்!
Nov 14, 2022, 06:35 PM IST
மதுரை செல்லத்தம்மன் கண்ணகி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சிம்மக்கல் வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது செல்லத்தம்மன் ஆலயம். அரிவாள், கத்தி, சூலாயுதம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் எட்டு கரங்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளார் செல்லத்தம்மன்.
சமீபத்திய புகைப்படம்
கையில் கொன்றை மலருடன் காட்சி தரும் செல்ல தமிழனுக்கு பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் தனி சன்னதி கொண்டுள்ள கண்ணகிக்கும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சிலப்பதிகார நாயகியான கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளுடன் மதுரை மாநகரை அடைந்தபோது இந்த திருக்கோயில் அமைந்திருக்கும் ஆயர் குலம் பகுதியில் தான் முதலில் அடைக்கலம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவலன் கள்வன் எனக் குற்றம் சுமத்தப்பட்டு கொலை உண்ட பிறகு பாண்டிய மன்னனிடம் வாதம் செய்து தனது கணவன் கள்வன் இல்லை என நிரூபித்த கண்ணகி, சேரநாடு செல்வதற்கு முன் இந்த கோயிலுக்கு அழைத்து வரப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
இடது கையில் சிலம்பும் வலது கையில் செண்டும் ஏந்திய நிலையில் அருள் புரிகிறார் கண்ணகி. கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குலப்பெண் மாதிரி இடைச்சி அம்மனாக வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். 1500 வருடங்கள் பழமையான இக்கோயிலில் தல மரம் வில்வ மரம் மற்றும் அரச மரமாகும்.
முன் மண்டப தூண்களில் அஷ்டகாளி சிற்பங்கள் உள்ளன. பேச்சியம்மன் தெற்கு திசை நோக்கி கோயில் கொண்டுள்ளார். மீனாட்சி கோயிலுக்குள் மற்ற கோயிலில் இருந்து சுவாமியோ, அம்மனோ உள்ளே செல்ல முடியாது. ஆனால் இக்கோயில் தெய்வமான செல்லத்தம்மன் மட்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வரும் அனுமதி பெற்று இருப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
தை மாத பிரமோற்சவத்தில் திருகல்யாணத்தன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிவன் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளும் செல்லத்தம்மன், திருமண பட்டுடன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். மதுரை நகரின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் செல்லத்தம்மன் தன்னை வழிபடுபவர்களின் துயர்களை நீக்கி வேண்டிய வரங்களை தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.