தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cyclone Michaung: யார் யாருக்கு ரூ.6000 நிவாரணம் கிடைக்கும் ? - தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை இதோ..!

Cyclone Michaung: யார் யாருக்கு ரூ.6000 நிவாரணம் கிடைக்கும் ? - தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை இதோ..!

Karthikeyan S HT Tamil
Dec 13, 2023 04:19 PM IST

மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில், எந்தெந்த வட்டங்களில் நிவாரணம் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை பெருவெள்ளம் 2023
சென்னை பெருவெள்ளம் 2023

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 வழங்கப்படுவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள குடும்பங்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 வட்டங்களில் நிவாரண தொகை வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூரில் 3 வருவாய் கிராமங்களிலும் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களு்ககு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6,000 வழங்கப்படும்.

இந்த மழை வெள்ளத்தால் மத்திய மாநில அரசு மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில், அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளிலேயே தேவையான அளவு வைத்திட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்குதல், டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக, முன்னதாக அளிக்கும் பணி ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிப்பதுடன், தேவாயா எண்ணிக்கையில் விண்ணப்ப படிவங்கள் நியாய விலைக் கடைகளில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதில் எந்தவித சிரமும் ஏற்படாத வகையில் விநியோகிப்பதற்காக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் காவல்துறையுடன் இணைந்து தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

நிவாரண உதவிகளை வழங்கும்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தொகையினை மாநில பேரிடர் நிவாரண நிதி கணக்குத் தலைப்பில் வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து உரிய மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்