தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் சதுப்பு நிலக் காடுகள் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் சதுப்பு நிலக் காடுகள் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்

Priyadarshini R HT Tamil
Apr 30, 2023 12:02 PM IST

Mangrove Forests : கரியமில வாயுவை சேமிப்பத்தில் நிலத்தில் உள்ள மரங்களைக் காட்டிலும், சதுப்பு நிலக்காடுகள் 5 பங்கு கூடுதல் திறனுடன் சேமித்து வைக்கும் தன்மை கொண்டவை.

கோப்புபபடம் - பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்
கோப்புபபடம் - பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதை கருத்தில்கொண்டு,புவிவெப்பமடைதலைக் கட்டுபடுத்த சதுப்பு நிலக்காடுகளை அரசு வளர்க்க திட்டமிட்டாலும் ஐஎஃப்எஸ்ஆர் 2021 அறிக்கைப்படி 71 சதுர கி.மீ சதுப்பு நிலக்காடு பரப்பை மட்டுமே 2017-21 இடைப்பட்ட காலத்தில் இந்தியாவால் அதிகரிக்க முடிந்தது.

சதுப்பு நிலக்காடுகளை மீட்டெடுக்க ரூ.200 கோடி போதுமானது. ஆனால் அவற்றால் கிடைக்கும் பயனோ ரூ.1080 கோடி. அவை நன்கு வளர்ந்து பயனைத் தர 30 ஆண்டுகள் ஆகும் என்றாலும், ஒரு சதுப்பு நிலத்தாவரத்தை நடுவதற்கு ரூ.5 மட்டுமே செலவாகிறது. அதன் மீதி வளர்ச்சியை இயற்கையே பார்த்துக் கொள்ளும் என்பதால் பெரும் பொருட்செலவு இல்லை.

சதுப்பு நிலப்பகுதியில் புதிதாக தாவரங்களை உருவாக்க, அதன் உப்புத் தன்மையை கணக்கில்கொண்டே எவை அங்கு நன்கு வளரும் என தீர்மானித்து அவற்றை அங்கே நட முடியும்.

இந்தியாவில் சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க, மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்த தனி அமைப்புகள் இல்லாமல் இருப்பது வேதனையே.

இந்தியாவில் 46 வகை சதுப்பு நிலத்தாவர வகைகள் இருந்தாலும், தமிழகத்தில் 16 வகை சதுப்பு நிலத்தாவரங்கள் மட்டும் 0.035% பரப்பை ஆக்கிரமித்து இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் முத்துப்பேட்டையில் 2019ல் ஆய்வாளர்கள் நர்மதா மற்றும் அன்னைதாசன் அவர்கள் செய்த ஆய்வில், 2000மாவது ஆண்டில் அவை 1475.642 மெகா கிராம், 2010ம் ஆண்டில்,3,646.312 மெகா கிராம், 2017ம் ஆண்டில் 1,677.72 கெமா கிராம் என்ற அளவில் கார்பனை சேமித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவிலுள்ள சுந்தர்பன் சதுப்பு நிலக்காடுகளை விட வண்டல் மண் படிதல் குறைவாக இருப்பதால், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 4 மடங்கு அதிக கார்பனை சேமிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

2019ம் ஆண்டு ஐஎஃப்எஸ்ஆர் அறிக்கைப்படி முன்பு இருந்ததைக் காட்டிலும், 54 சதுர கி.மீ. சதுப்பு நிலக்காடுகள் இந்தியாவில் அதிகரித்திருந்தாலும், தமிழகத்தில் அதன் பரப்பு 4 சதுர கி.மீ. குறைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 2 சதுர கி.மீ. குறைந்தும், அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 1 சதுர கி.மீ. என சதுப்பு நிலக்காடுகள் பரப்பு குறைந்துபோயுள்ளது.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் (இந்தியாவின் ராம்சார் பாதுகாப்பு பகுதியில் உள்ளது) தற்போது 11 சதுர கி.மீ.பரப்பில் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் மீன்கள், பிற காட்டுப் பொருட்களை நம்பி 5 வருவாய் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சதுப்பு நிலக்காடுகளின் அழிவிற்கு,

புவி வெப்பமடைதல் காரணமாக, மழையளவு குறைந்து போதல் (இதனால் உப்புத் தன்மை நீர்த்துப்போவது குறைந்து, உப்புத்தன்மை அதிகமாகி அவற்றின் திறன் வெகுவாகக் குறைகிறது)

கடலோர, கடலில் கலக்கும் மாசுகள் அதிகமாவதால்

வண்டல் மண் படிதல் அதிகமாவதால்

அதிக உப்புத்தன்மை சேர்வதால் (நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டால், கடல் நீர், நிலப்பகுதியில் உள்ள குடிநீரில் கலந்து அதன் உப்புத்தன்மை அதிகரிக்கிறது)

புவி வெப்பமடைதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து, அதிக நாள் சதுப்பு நிலக்காடுகள் நீரில் மூழ்கியிருந்தாலும், அவற்றின் திறன் குறைகிறது.

(நடுத்தர வெப்பநிலை உயர்வு, நடுத்தர உப்புத்தன்மை இருப்பது சதுப்புநிலக் காடுகளின் திறனை அதிகரித்து, அவற்றின் வளர்ச்சியை உறுதிபடுத்துகிறது)

மேற்கூறியவை காரணமாக இருப்பதால், புவிவெப்பமடைதலைக் குறைக்க, சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசு முழு மூச்சுடன் இறங்கி செயல்பட வேண்டும்.

சுனாமி, புயலின் தாக்கங்களிலிருந்து நம்மை காக்கும் சதுப்பு நிலக்காடுகளே, 2020 மேயில் வந்த ஆம்பன் புயலால் மூன்றில் ஒரு பங்கு சதுப்பு நிலக்காடுகள் இந்தியாவில் பாதிப்படைந்தன.

IFSR (India Forest Survey Report)2019 அறிக்கையின்படி தமிழகத்தில் 45 சதுர கி.மீ. பரப்பில் சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.

2030க்குள், புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தும் பொருட்டும், கார்பன் சேமிப்பை அதிகரிக்கும் பொருட்டும் 56 சதுர கி.மீ. ஆக சதுப்புநிலக்காடுகளின் பரப்பை உயர்த்த தமிழக அரசு திட்டம் தீட்டி, முதல் கட்டமாக, மன்னார் வளைகுடா பகுதியில் 1,050 ஹெக்டேர் பரப்பில் சதுப்பு நிலக் காடுகளை அதிகப்படுத்த தமிழக அரசு தீட்டிய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப் பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்