தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Baslaji: செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என உத்தரவு!

Senthil Baslaji: செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என உத்தரவு!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 30, 2023 11:03 AM IST

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய பணத்தை வெளிநாடுகளில் பறிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்

அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய பணத்தை வெளிநாடுகளில் பறிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் கடந்த ஆகஸ்ட் 12ஆம்தேதி அன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவரது நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “செந்தில் பாலாஜியை மேலும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவருக்கு நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவசர வழக்காக விசாரிக்க கோரி நேற்று சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார்.

இந்நிலையில் இன்று மனு பட்டியலுக்கு வராத நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் விரைந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்