தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rip Captain Vijayakanth: ஒற்றை Mla To எதிர்க்கட்சித் தலைவர்! விஜயகாந்தின் அரசியல் பயணம்!

RIP Captain Vijayakanth: ஒற்றை MLA To எதிர்க்கட்சித் தலைவர்! விஜயகாந்தின் அரசியல் பயணம்!

Kathiravan V HT Tamil
Dec 28, 2023 01:26 PM IST

”கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் அரசியல் ஜாம்பவான்கள் இருந்தபோதே கட்சி தொடங்கி கலங்கடிக்க வைத்தவர் கேப்டன் விஜயகாந்த்”

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் தேர்தல்; முதல் வெற்றி

திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மற்றொரு திராவிடக் கட்சியாக தேமுதிக அரசியல் களத்தில் இறங்கியது. நடிகர் விஜயகாந்தின் திரை அறிமுகம் மக்களிடையே பொதுவான இணக்கத்தை பெற்றுத் தந்தது. பழைய செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்கள் அக்கட்சியின் உயிர் நாடியாய் மாறியது.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும், கடையநல்லூர், திருநெல்வேலி தொகுதிகளில் மட்டும் மோதிரம் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏவாக வென்று சட்டமன்றத்திற்கு சென்றார். அத்தேர்தலில் 8.4 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்று இருந்தது.

2009 மக்களவைத் தேர்தல்

2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தாலும் 10 சதவீத வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து இருந்தது.

2011 சட்டமன்றத் தேர்தல்

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9 சதவிகித வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்து இருந்தன. பின்னர் அதிமுகவுடன் சட்டமன்றத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியது.

சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் விஜயகாந்த் நாக்கை துருத்திய சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேமுதிகவை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு அளித்தது விஜயகாந்தின் அரசியல் சிரத்தன்மையை கேள்வி எழுப்பியது.

2014 மக்களவைத் தேர்தல்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 16 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த அதன் வாக்கு வங்கி 6.1 சதவீதமாக குறைந்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்தின் பேட்டிகளும், ஊடகங்கள் முன்னர் அவர் நடந்து கொண்ட நடவடிக்கைகளும் சர்ச்சைக்குள்ளாகின. அப்போது வளரத் தொடங்கிய சமூகவலைத்தளங்கள் விஜயகாந்தை மீம்ஸ் மெட்டிரீயலாக சித்தரித்தது. 

2016 சட்டமன்றத் தேர்தல்

மக்கள் நலக் கூட்டணி உடன் இணைந்து 2016 சட்டமன்றத் தேர்தலை தேமுதிக எதிர்கொண்டது. இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். ஆனால் அக்கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது அதன் வாக்கு வங்கி 2.4 சதவிகிதமாக குறைந்தது.

2019 மக்களவைத் தேர்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கட்சிகளுடன் இணைந்து 4 தொகுதிகளில் தேமுதிக போட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இக்காலகட்டத்தில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிடமும் தேமுதிக கூட்டணி பேச முயன்றதாக வெளியான செய்திகள் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

2021 சட்டமன்றத் தேர்தல்

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் தொகுதிப்பங்கீட்டில் உடன்படாததால் அக்கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாப்பை இழந்தது. இதன் வாக்கு வங்கி 0.43 சதவீதமாக குறைந்தது.

தேர்தல் சவால்கள்

தேமுதிக அதன் ஆரம்ப வேகத்தை தக்கவைக்க போராடி, அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் சவால்களை எதிர்கொண்டது. விஜயகாந்தின் உடல் நலக்குறைவு, உட்கட்சிப் பூசல்கள், தலைமைப் பிரச்சனைகள், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாறுதல்கள் ஆகியவை கட்சியின் தேர்தல் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்