GT vs CSK: சிஎஸ்கேவை சொந்தமண்ணில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்: 35 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி: கில், சுதர்ஷன் சதம்
GT vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சுப்மன் கில், சாய் சுதர்ஷன் சதம் அடித்தனர்.
GT vs CSK: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 59ஆவது லீக் ஆட்டம், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின.
இதில் முதலில் டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங்கினை தேர்வு செய்தது. இதனால், ஆரம்பத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.
களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷனும் கேப்டன் சுப்மன் கில்லும் மிகச்சிறப்பாக ஆடி சதம் ஆடித்தனர். சாய் சுதர்ஷன் 51 பந்துகளில் 103 ரன்கள் விளாசியபோது, தேஷ் பாண்டேவின் பந்தில், டூபேவிடம் கேட்ச்கொடுத்து பெவிலியன் திரும்பினார். அவரது சகாவான சுப்மன் கில் 55 பந்துகளுக்கு 104 ரன்கள் அடித்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடக்கம்.
அதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லர் 11 பந்துகள் பிடித்து 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை ஆடினார். ஷாருக்கான் 2 ரன்கள் மட்டுமே எடுத்து, ரன் அவுட் செய்யப்பட்டார். இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் துஷார் தேஷ்பாண்டே அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சேஸிங்கில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்:
அதன்பின், 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களான அஜின்கியா ரஹானே 1 ரன்னும், ரச்சின் ரவிந்திரா 1 ரன்னும், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் நான்காவதாக களமிறங்கிய டர்லி மிட்செல் பொறுப்புடன் ஆடி,அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அது வெகுநேரம் நிற்கவில்லை. 63 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷர்மாவின் பந்தில், ஷாருக் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
மேலும் அடுத்து களமிறங்கிய மொயின் அலி 56 ரன்கள் எடுத்தபோது, ஷர்மாவின் பந்தில் நூர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே, 21 ரன்கள் எடுத்தபோது, ஷர்மாவின் பந்தில், நூர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
மேலும், ரவீந்திர ஜடேஜா 18 ரன்னும், மிட்செல் சான்ட்னர் ரன் எதுவும் எடுக்காமலும், ஷர்துல் தாக்கூர் 3 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டாகியும் வெளியேறினர். எட்டாவதாக களமிறங்கிய எம்.எஸ். தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 26 ரன்களை எடுத்தார். இறுதியாக சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 196 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது. குஜராத் அணியின் சார்பில், அதிகபட்சமாக, மொஹித் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
55 பந்துகளில் 104 ரன்கள் அடித்த சுப்மன் கில், மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார். குஜராத் அணியில் ஆடும் தமிழரான சாய் சுதர்ஷன் அவருக்கு அடுத்தபடியாக 103 ரன்கள் எடுத்து பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தார்.
டாபிக்ஸ்