தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vengaivayal Issue : வேங்கைவயல் விவகாரம் - நேரடி விசாரணையை தொடங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன்!

Vengaivayal Issue : வேங்கைவயல் விவகாரம் - நேரடி விசாரணையை தொடங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன்!

Divya Sekar HT Tamil
May 06, 2023 11:27 AM IST

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வேங்கைவயல் விவகாரம்
வேங்கைவயல் விவகாரம்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறிய வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாத காலமாக சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல் இறையூர் முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது. விரைவில் அந்த ஆணையம் விசாரணை செய்யும் என்றும் அதற்கு தமிழக அரசு வேண்டிய ஏற்பாடுகளை ஆணையத்திற்கு செய்து கொடுக்கும் என்றும் சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.

இதற்கிடையில் ஏற்கனவே மேல் நிலை நீர் தேக்க தொட்டி நீரை சோதனை செய்ய பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் டிஎன்ஏ சோதனை முடிவு வெளியாகும் போது குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் மொத்தம் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், அதில் 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்ய போலீஸார் முடிவெடுத்தனர். இதற்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உட்பட 2 பேருக்கு சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர், டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரி சேகரிப்பதற்காக 11 பேரும் ஆஜராகுமாறு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதில், ஏற்கெனவே குரல் மாதிரி பரிசோதனைக்கு ஆஜராகிய காவலர் மற்றும் 2 பேர் என மொத்தம் 3 பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயியல் பிரிவு ஆய்வகத்தில் ஆஜராகினர். அவர்களிடமிருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. 8 பேர் ரத்த மாதிரி கொடுக்க வராமல் புறக்கணித்தனர்.

இந்நிலையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வேங்கைவயலில் நேரில் கள ஆய்வு செய்தார்.

கள ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உட்பட 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்