தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadoss Tweet : மாநில மொழிகளில் தீர்ப்பு - ராமதாஸ் வரவேற்பு!

Ramadoss Tweet : மாநில மொழிகளில் தீர்ப்பு - ராமதாஸ் வரவேற்பு!

Divya Sekar HT Tamil
Jan 23, 2023 01:23 PM IST

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்துக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைக்க வேண்டிய அவசியத்தை தலைமை நீதிபதி எடுத்துரைத்தார். இவரின் இந்த கருத்து பாராட்டத்தக்கது என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கூறியுள்ளனர்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் அறிந்து கொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறது!

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் ஏற்கனவே 17.07.2019-ஆம் நாள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டு விட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்! " என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்