தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Online Rummy Ban: ஆன்லைன் சூதாட்டதை விட ஆளுநரின் சூதாட்டம் மோசம்-நீதிபதி சந்துரு

Online rummy ban: ஆன்லைன் சூதாட்டதை விட ஆளுநரின் சூதாட்டம் மோசம்-நீதிபதி சந்துரு

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 09, 2023 11:26 AM IST

ஆன்லைன் சூதாட்ட தடை குறித்த அவசர சட்டத்தில் இதே ஆளுநர் கையெழுத்து போட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி - சந்துரு
ஆர்.என்.ரவி - சந்துரு

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் கூதாட்ட விளையாட்டால் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.மேலும் இந்த விளையாட்டுக்கு அடிமையான பலர் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால் அவசர சட்டம் அக்டோபர் 3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில் சட்ட மசோதாவை அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ம் தேதி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சட்ட மசோதா குறித்து, கடந்த 24ம் தேதி ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா குறித்து ஆளுநருக்கு ஏற்பட்டிருக்கிற சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கம் தயாரித்து, கடந்த 25ம் தேதி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆனாலும், ஆளுநர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறியதாவது," ஆளுநர் மீண்டும் நீதிமன்றத்தில் குட்டு வாங்க ஆசைப்படுகிறார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை விட ஆளுநரின் சூதாட்டம் மோசமாக உள்ளது. சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்டத்தை எந்த காரணம் கொண்டும் திருப்பி அனுப்பும் உரிமை அவருக்கு இல்லை. மறு பரிசீலனை வேண்டுமானால் செய்ய சொல்லலாம். ஆனால் இவர் சட்ட ஆலோசனை வழங்குகிறார்.

ஆன்லைன் சூதாட்ட தடை குறித்த அவசர சட்டத்தில் இதே ஆளுநர் கையெழுத்து போட்டுள்ளார். இப்போது நிரந்தர சட்டத்திற்கு கையெழுத்திட மறுப்பது ஆளுநரின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்