தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: கப்சிப் ஆகும் Ed! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்! விரைவில் வெளியே வருகிறாரா செந்தில் பாலாஜி?

Senthil Balaji: கப்சிப் ஆகும் ED! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்! விரைவில் வெளியே வருகிறாரா செந்தில் பாலாஜி?

Kathiravan V HT Tamil
Apr 02, 2024 04:27 PM IST

இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கினால் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கினால் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இப்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்ட முதல் ஆம் ஆத்மி மூத்த தலைவர் என்ற பெருமையை சஞ்சய் சிங் பெற்றுள்ளார். 

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா மற்றும் பி.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட சலுகையை முன்னுதாரணமாக குறிப்பிடக்கூடாது என்று கூறியது. ஆறு மாதங்களாக சிறையில் இருந்த சஞ்சய் சிங், ஜாமீனில் இருக்கும்போது இந்த வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர், 'சத்யமேவ ஜெயதே' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், சிங் வசம் இருந்து எந்த பணமும் மீட்கப்படவில்லை என்றும், அவர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு விசாரணையில் சோதிக்கப்படலாம் என்றும் பெஞ்ச் கூறியது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. இதுவரை 25 முறைக்கும் மேல் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபை செய்ததை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 

ஜாமீன் வழங்க எந்தவொரு நிபந்தனையும் ஏற்க தயார் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவது குறித்து வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் 280 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 

WhatsApp channel
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.