Pudhumai Pithan: பல கெட்டப்பில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம்ஜிஆர்!கருணாநிதி எம்எல்ஏவான பின் எழுதிய முதல் கதை
இளவரசனாக வரும் எம்ஜிஆர் பாம்பாட்டி, மந்திரவாதி, முகமூடி வீரன், பெண் பல கெட்டப்பில் தோன்றி வாள் சண்டை, குதிரையேற்றம் என ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி எம்எல்ஏ ஆன பிறகு கதை, வசனம் எழுதி ய முதல் படமாக புதுமைப்பித்தன் உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான மு. கருணாநிதி - எம்ஜிஆர் கூட்டணியில் உருவாகி ரசிகர்களை கவர்ந்த மற்றொரு வெற்றி படம் புதுமைப்பித்தன். திமுகவில் முக்கிய தலைவராக இருந்த மு. கருணாநிதி அரசியல், சினிமா என இரண்டிலும் முழுவீச்சில் ஈடுபட்டு நேரத்தில், அவர் முதல் முதலாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு ஆனபிறகு கதை, வசனம் எழுதிய படம் புதுமைப்பித்தன் அமைந்தது.
வழக்கமான ஆள்மாறாட்டம், எதிரிகளை வீழ்த்தும் ஹீரோ என்கிற கதையை மன்னர் கால கதையமைப்பில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார்கள். மு. கருணாநிதி கதை, வசனம் எழுத படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்கியிருப்பார்.
எம்ஜிஆர், டி.எஸ். பாலையா, ஜே.பி. சந்திரபாபு, டி.ஆர். ராஜகுமாரி, பி.எஸ்,.. சரோஜா, ஈ.வி. சரோஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்
பதவி ஆசையால் வீழ்த்தப்பட்ட தந்தையை மீட்கும் இளவரசன்
பதவி ஆசையால் மன்னரின் சகோதரர் அவரை சிறைவைத்துவிட்டு இறந்து விட்டதாக நாடகமாடுகிறார். கடல்வழி பயணத்தை முடித்து தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க வரும் இளவரசரான எம்ஜிஆர், தந்தை சிறை வைக்கப்பட்டிருப்பது ரகசிய தகவல் மூலம் தெரியவருகிறது.
அத்தோடு தனக்கும் பித்த மருந்து கொடுத்து பைத்தியமாக்கும் முயற்சியும் நடப்பதை அறிந்து கொள்கிறார். இவை எதுவும் அறியாததுபோல் தனக்கு விரிக்கப்பட்ட வலையில் வீழ்ந்தவர் போல் நடித்து எதிராளிகளை தண்டித்து தந்தையையும், ராஜ்ஜியத்தையும் எப்படி எம்ஜிஆர் மீட்டெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
பல கெட்டப்புகளில் தோன்றும் எம்ஜிஆர்
எம்ஜிஆர் முன்னணி ஹீரோவாக உருவெடுத்த பின்னர் வெளியான இந்த படத்தில் அவரது படங்களில் வழக்கமாக இடம்பெறும் வாள் சண்டை, குதிரையேற்றம், சண்டைக்காட்சிகள் என அனைத்தும் படத்தில் இடம்பெற்று ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கும்.
அதேபோல் பாம்பாட்டி, மந்திரவாதி, முகமூடி வீரன், பெண் என பல்வேறு கெட்டப்புகளில் தோன்றி எம்ஜிஆர் துப்புதுலங்கும் காட்சிகள் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும்.
இரண்டு காதல்
எம்ஜிஆருக்கு உதவும் நாட்டியக்கார பெண்ணாகவும், அவரை ஒரு தலையாக காதலித்து இறுதியில் அவருக்காக உயிரை விடும் கதாபாத்திரத்திலும் டி.ஆர். ராஜகுமாரி நடித்திருப்பார்.
எம்ஜிஆரின் காதலியாக பி.எஸ். சரோஜா தோன்றியிருப்பார். எம்ஜிஆர் - பி.எஸ். சரோஜா இடையிலான காதல் காட்சிகள் ரசனையுடன் காட்சிப்படுத்தப்படிருக்கும். காமெடி வேடத்திலும், எம்ஜிஆருக்கும் உதவும் கதாபாத்திரமாகவும் வரும் சந்திரபாபு நகைச்சுவை சிரிப்பலைகளை வரவழைத்து கதையோட்டத்துடனே பயணிக்கும் விதமாக இருக்கும்.
பாடல்கள் ஹிட்
தஞ்சை என். ராமையா தாஸ் பாடல் வரிகள் எழுத, ஜி. ராமநாதன் இசையில் படத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றிருக்கும். சந்திரபாபு பாடிய தில்லானா பாட்டு பாடி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மாறாத சூழ்ச்சி போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதர பாடல்களும் அந்த காலகட்டத்தில் ஹிட்டாகின.
எம்ஜிஆருக்கு கம்பேக் கொடுத்த படம்
இந்த படத்துக்கு முன்னர் எம்ஜிஆர் நடிப்பில் 1957ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான ராஜ ராஜன் என்ற படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதையடுத்து பிளாப்புக்கு பிறகு அடுத்த மூன்று மாதத்தில் வெளியான புதுமைப்பித்தன் எம்ஜிஆருக்கு கம்பேக் ஹிட்டாக அமைந்தது.
படத்தின் கதையும், காட்சியமைப்புகளும் அந்த கால பான் இந்தியா படத்துக்கான கண்டெண்டாகவே இருக்கும். ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் அடிப்படையாக கொண்ட கதையம்சத்தை கொண்டிருக்கும் கதை, எளிதில் கணிக்ககூடிய திரைக்கதை என விமர்சிக்கபட்ட போதிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான புதுமைப்பித்தன் வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்