தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai: காரில் சென்ற தம்பதியிடம் ரூ.50 லட்சம் வழிபறி: போலீஸ் உள்பட 5 பேர் கைது!

Madurai: காரில் சென்ற தம்பதியிடம் ரூ.50 லட்சம் வழிபறி: போலீஸ் உள்பட 5 பேர் கைது!

Karthikeyan S HT Tamil
Apr 15, 2023 12:44 PM IST

மதுரை அருகே காரில் சென்ற தம்பதியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் தனது மனைவி சுலேகாவுடன் ரூ.50 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு காரில் சென்றுள்ளார். காரை மதுரையை சேர்ந்த அபுபக்கர் என்ற டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்களது கார் கொட்டாம்பட்டி- திருச்சுனை பகுதியில் சென்ற போது போலீஸ் உடையில் நின்றுகொண்டிருந்த இருவர் காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது சேக் தாவூத் வைத்திருந்த 50 லட்ச ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்ட அவர்கள், பணத்தை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து கொட்டாம்பட்டி காவல் நிலையம் சென்ற சேக் தாவூத், அங்கு பணத்தை எடுத்து சென்ற போலீஸார் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த காவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக சேக் தாவூத் அளித்த புகாரின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து பணத்தை பறித்துச் சென்றவர்களைத் போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சேக் தாவூத்தின் காரை ஓட்டி வந்த டிரைவர் அபுபக்கர் சித்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அபுபக்கரின் அண்ணன் சதாம் உசேன், பார்த்தசாரதி, கறிக்கடை நடத்தி வரும் அசன் முகம்மது, ஆயுதப்படை காவலரான நாகராஜ கோகுல பாண்டியன் ஆகியோர் திட்டமிட்டு சோதனை என்ற பெயரில் ரூ.50 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 49 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் வியாபாரி ஒருவரிடம் ரூ. 10 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் போலீஸ்காரர் ஒருவர் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் சிக்கியிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்