தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbumani Ramadoss: வேளாண் தொழில்நுட்ப மேலாளர்களுக்கு பெரும் அநீதி- அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss: வேளாண் தொழில்நுட்ப மேலாளர்களுக்கு பெரும் அநீதி- அன்புமணி ராமதாஸ்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 14, 2023 11:06 AM IST

M.K.Stalin: வட்டார தொழில்நுட்ப மேலாளர்களுக்கு நடப்பாண்டில் குறைந்தபட்சம் ரூ.50,000, உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ரூ.40,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அன்பு மணி வலியுறுத்தல்

முதல்வருக்கு அன்புமணி கடிதம்
முதல்வருக்கு அன்புமணி கடிதம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் 2014-ஆம் ஆண்டு முதல் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக ஊதிய உயர்வும், பணிநிலைப்பும் வழங்கப்படவில்லை. இது சமூகநீதிக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது.

வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிறந்த கல்வித்தகுதி கொண்டவர்கள். வட்டார மேலாளர்களுக்கு முதுநிலை வேளாண் அறிவியல் (எம்.எஸ்சி - அக்ரி) படிப்பும், உதவி மேலாளர்களுக்கு இளநிலை வேளாண் அறிவியல் ( பி.எஸ்சி - அக்ரி) படிப்பும் குறைந்தபட்ச கல்வித்தகுதி ஆகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தொடக்கத்தில் மாத ஊதியமாக முறையே ரூ.25,000, ரூ.15,000 வழங்கப்படும்; ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கப்படும்; காலப்போக்கில் பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திட்ட வழிகாட்டுதலில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உறுதிமொழி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

2018-ஆம் ஆண்டில் வேளாண் துறை இயக்குனரின் செயல்முறை ஆணைப்படி வட்டார தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 30,000 ரூபாயும், உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 25,000 ரூபாயும் மாத ஊதியமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடைந்தும் கூட அந்த ஆணை செயல்பாட்டுக்கு வரவில்லை. 2014-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அதே ஊதியத்தை இப்போது வரை அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிற மாநிலங்களில் இதே திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி நிலைப்பும் வழங்கப்பட்டு விட்டது.

வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்களின் கல்வித் தகுதி மற்றும் அவர்களின் உழைப்புடன் ஒப்பிடும் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு ஆகும். இந்த ஊதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் அவர்கள் அவதிப்படுகின்றனர். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விதிகளின்படி வட்டார தொழில்நுட்ப மேலாளர்களுக்கு நடப்பாண்டில் குறைந்தபட்சம் ரூ.50,000, உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ரூ.40,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி அந்த அளவு ஊதியம் வழங்குவதுடன், அவர்களுக்கு பணி நிலைப்பும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்