தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Alliance Doors Open For Aiadmk - Says Home Minister Amit Shah

Amit Shah: ‘மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணியா?’ அமித்ஷா பேட்டியால் வெடித்தது சர்ச்சை!

Kathiravan V HT Tamil
Feb 07, 2024 09:12 AM IST

”அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த நிலையில் வெளிப்படையான அழைப்பை அமித்ஷா விடுத்துள்ளார்”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - உள்துறை அமைச்சர் அமித் ஷா- கோப்புப்படம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - உள்துறை அமைச்சர் அமித் ஷா- கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக தேர்தலை சந்தித்த அதிமுக, பாஜக கட்சிகள் தமிழ்நாட்டில் தனித்தனியாக கூட்டணி அமைக்க பணிகளை செய்து வருகிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த ஆண்டே அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. 

கடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தேமுதிக, பாமக கட்சிகளுன் தீவிர பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். 

பாஜக கூட்டணியில் ராஜ்யசபா உள்ளிட்ட 12 தொகுதிகளை பாமக கேட்பதாகவும், அதிமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் உட்பட 7 தொகுதிகளை பாமக கேட்பதாகவும் கூறப்படுகிறது. தேமுதிகவும், கூட்டணி பேசும் கட்சிகளிடம் கட்டாயம் ஒரு ராஜ்யசபா இடத்தை கேட்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், நாளேடு ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தினத்தந்தி நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என அமித் ஷா கூறி இருந்தது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன்,  எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களோடு இருந்தால் பலம் என பாஜக கருதுகிறது.  இதுமட்டும் இன்றி இதில் நிறைய உள் அர்த்தங்கள் உள்ளது. கூட்டணியில் இருந்து சென்றிருந்தாலும் பரவாயில்லை, இப்போது மீண்டும் வாய்ப்பு தருகிறோம், மீண்டும் வாங்க என கூப்பிடுகிறார்கள்.  இதை உதாசினப்படுத்தினால் பாஜகவின் எதிர்வினை என்னவாக இருக்கப்போகிறது என்பதுதான் இப்போது எழும் கேள்வியாக உள்ளது. 

WhatsApp channel