Kallakurichi Liquor Deaths: ’கள்ளச்சாராய மரணம்! சினிமாகாரர்களுக்கு மன்னிப்பே கிடையாது’ நடிகர்களை விளாசும் ஜெயக்குமார்!
Kallakurichi Liquor Deaths: கள்ளக்குறிச்சி மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! என தெரிவித்து உள்ளார் என ஜெயக்குமார் ட்வீட்
மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் வரை உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக தனது ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!
இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!
நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்!
மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்?
ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.
அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.
மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! என தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 116 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 38 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
விசாரணை அதிகாரி நியமனம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.