தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Metro Trains: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் வருகை குறைவு - என்ன காரணம்?

Chennai Metro Trains: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் வருகை குறைவு - என்ன காரணம்?

Karthikeyan S HT Tamil
Mar 01, 2023 01:18 PM IST

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதம் பயணிகளின் வருகை எண்ணிக்கை குறைவாக இருந்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் - கோப்புபடம்
மெட்ரோ ரயில் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு கடந்த மாதம் 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,66,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023,பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,20,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி 39,85,113 பயணிகள் பயணித்துள்ளனர்.

நடப்பாண்டில் சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் 63 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பெருநகர சென்னை மக்களின் போக்குவரத்து வசதி எளிதாகியுள்ளதோடு, போக்குவரத்து நெரிசலும் சற்று குறைந்துள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இது தற்போது வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலாக இருந்தாலும் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்