தமிழ் செய்திகள்  /  Sports  /  Compilation Of Victories Of Indian Team At Indore Cricket Ground

Indore Wins: ‘இந்தூரும் இந்தியாவும்…’ அடேங்கப்பா 2006 முதல் 2023 இத்தனை சாதனையா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 25, 2023 06:10 AM IST

‘இங்கு நடந்த 6 போட்டிகளிலும் இந்தியா அசத்தல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இது நேற்றும் தொடர்ந்திருக்கிறது. அப்படி என்ன நடந்தது இந்தூரில்?’

2006 முதல் 2023 வரை இந்தூரில் இந்தியா விளையாடி ஆட்டங்களும், வெற்றிகளையும் குறிக்கும் படம்
2006 முதல் 2023 வரை இந்தூரில் இந்தியா விளையாடி ஆட்டங்களும், வெற்றிகளையும் குறிக்கும் படம்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் இரண்டு போட்டிகளை இந்திய வெற்றி பெற்றதுமே, மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெறும் என அடித்துச் சொன்னார்கள் பலர். அதற்கு காரணம், போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம். இந்தியாவிற்கும் இந்தூர் மைதானத்திற்கும் அப்படி ஒரு ராசி.

இங்கு நடந்த 6 போட்டிகளிலும் இந்தியா அசத்தல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இது நேற்றும் தொடர்ந்திருக்கிறது. அப்படி என்ன நடந்தது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்? வாங்க பார்க்கலாம்…

2006-இங்கிலாந்து அணியை வீழ்த்தியது!

2006 ஏப்ரல் 15 ம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தூரில் 7வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் 289 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்தப்பா, டிராவிட், யுவராஜ் சிங், ரெய்னா ஆகிய நான்கு பேர் அரை சதம் அடித்தனர். ஸ்ரீசாந்த் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2008-இங்கிலாந்து அணியை வீழ்த்தியது!

2008 நவம்பர் 17 ம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில், 9 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்தது. யுவராஜ் சிங் 118 ரன்களும், கம்பீர் 70 ரன்களும், யூசுப் பதான் 50 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

2011- வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது!

2011ம் ஆண்டு டிசம்பர் 8 ம் தேதி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 4வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகளை இழந்து 418 ரன்கள் எடுத்தது. விரேந்தர் சேவாக் 219 ரன்கள் விளாசி, இரட்டை சதம் அடித்தார். கம்பீர் மற்றும் ரெய்னா அரை சதம் அடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் மட்டுமே எடுத்தது. 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

2015- தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது!

2015 ம் ஆண்டு அக்டோர் 14 ம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்க அணிக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தோனி ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், ரஹானே 51 ரன்களும் எடுத்தனர். அதன் பின் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

2017-ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது!

2017 ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி இறங்கிய இந்திய அணி, 47.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹானே 70, ரோஹித் சர்மா 71, ஹர்திக் பாண்ட்யா 78 ரன்கள் எடுத்தனர். 

2023- நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி!

ஜனவரி 24 நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டி தான். முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 101, சுப்மன் கில் 112 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 54 ரன்கள் எடுத்தனர்.  இரண்டாவது பேட் செய்த நியூசிலாந்து 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்த தொடர் வெற்றிகள் மூலம் இந்தூர் இந்தியாவின் வெற்றி ஊராக தொடர்கிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்