தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tamilnadu: தமிழகத்தை சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்- என்ன நடந்தது?

Tamilnadu: தமிழகத்தை சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்- என்ன நடந்தது?

Karthikeyan S HT Tamil
Mar 01, 2023 12:24 PM IST

TamilNadu Man Shot Dead: ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையது அகமது என்பவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையது அகமது.
ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையது அகமது.

ட்ரெண்டிங் செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லா சையது அகமது (32). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று (பிப்.28) ரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான தூய்மை பணியாளரை, ரஹ்மத்துல்லா கத்தியால் குத்தி உள்ளார். இதில், தூய்மை பணியாளருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரஹ்மத்துல்லாவை நெருங்கினர். அப்போது அவர்களையும் ரஹ்மத்துல்லா கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் போலீசார் அவரை 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நெஞ்சில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ரஹ்மத்துல்லா ரத்த வெள்ளத்தில சரிந்து விழுந்தார். 

உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அந்நாட்டு போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பற்றி இந்திய தூதரகம் ஆஸ்திரேலியா போலீசாரிடம் முழுமையான விசாரணை அறிக்கையை கேட்டுள்ளது. இது தொடர்பாக சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியது மற்றும் துரதிர்ஷ்டமானது. வெளியுறவு மற்றும் வர்த்தக்துறை, நியூ சவுத் வேல்ஸ் அலுவலகம் மற்றும் மாநில காவல்துறையுடன் சேர்ந்து இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்