தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mv Ganga Vilas: 51 நாள்கள்…முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கங்கா விலாஸ் கப்பல்

MV Ganga Vilas: 51 நாள்கள்…முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கங்கா விலாஸ் கப்பல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 01, 2023 12:20 PM IST

உலகின் மிக நீளமான ஆறு வழி சொகுசு கப்பலாக எம்.வி. கங்கா விலாஸ் கப்பல் தனது முதல் பயணத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளது. இந்தியாவில் 5 மாநிலங்கள், வங்கதேசம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரை சென்றடைந்தது.

51 நாள்கள் பயணத்தை முடித்த நீண்ட ஆற்று வழி கப்பல் கங்கா விலாஸ்
51 நாள்கள் பயணத்தை முடித்த நீண்ட ஆற்று வழி கப்பல் கங்கா விலாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட சொகுசு கப்பலான எம்.வி. கங்கா விலாஸ் முதல் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அஸ்லாம் மாநிலம் திப்ருகர் வரை மொத்தம் 3,200 கிலோ மீட்டர், 51 நாள்கள், இந்தியாவில் 5 மாநிலங்கள் வழியேயும், வங்கதேசம் வழியேவும்இந்த கப்பல் பயணம் மேற்கொண்டுள்ளது.

புத்தகயா, விக்ரம் ஷிலா, சுந்தரவனக்காடுகள், காஜிரங்கா தேசியப்பூங்கா, வங்கதேசத்தின் டாக்கா வழியாக உலக பாரம்பரிய தளம், தேசிய பூங்காக்கள், நதியை ஒட்டிய மலைதொடர்கள் என மொத்தமாக 50 சுற்றுலா தலங்கள் வழியே இந்த கப்பலின் பயணமானது அமைந்துள்ளது.

இந்த சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தையும் முழுமையாக முடித்து, அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் வந்தடைந்தது. இந்தக் கப்பலை ஒன்றிய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தலைமையில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 பயணிகளுக்கும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கப்பல் பயணத்தில் 40 குழு உறுப்பினர்கள் பயணித்தனர். தற்போது இந்த கப்பிலில் பயணம் செய்வதற்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.வி. கங்கா விலாஸ் கப்பல் தனது முதல் பயணத்தை திப்ருகரில் வெற்றிகரமாக முடித்துள்ளது. இதற்கான வரவேற்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது’’ என தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் பயணிக்க ஒரு நாளைக்கு ஒரு பயணிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு பயணி இந்தக் கப்பலில் 40 நாள் பயணம் செய்ய சுமார் ரூ. 20 லட்சம் வரை செலவாகும். 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த கப்பல் பயணத்தின்போது பிகார் மாநிலம் சாப்ரா நகரின் அருகே டோரிகஞ்ச் பகுதியில் போதுமான ஆழத்தில் நீர் இருப்பு இல்லாததன் காரணமாக பாதியிலேயே சிக்கியதாக தகவல்கள் வெளியானது. இதனால் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு கப்பலில் தவித்து வந்த சுற்றுலா பயணிகளை சிறிய படகுகள் மூலம் பத்திரமாக மீட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு கப்பல் ஆப்பரேட்டர்கள் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

IPL_Entry_Point