தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஹெலிகாப்டரில் ஊர்வலம் நடத்திய மத்தியப்பிரதேச மணமகன்கள் - நெகிழவைக்கும் காரணம்?

ஹெலிகாப்டரில் ஊர்வலம் நடத்திய மத்தியப்பிரதேச மணமகன்கள் - நெகிழவைக்கும் காரணம்?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 11, 2023 01:04 PM IST

தாத்தாவின் விருப்பத்திற்காக மணமகன்கள் ஹெலிகாப்டரில் பறந்து ஊர்வலம் சென்றனர்

ஹெலிகாப்டரில் பறந்த மணமகன்கள்
ஹெலிகாப்டரில் பறந்த மணமகன்கள் (ANI (Twitter))

ட்ரெண்டிங் செய்திகள்

வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சியின்போது நடைபெறும் ஊர்வல நிகழ்ச்சி பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அந்த வகையில் அவரவர் வசதிக்கேற்ப குதிரைகள், சாரட் வண்டிகள், ஒட்டகங்கள், அலங்கரிக்கப்பட்ட சொகுசு கார்களில் ஊர்வலம் நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் குரானா கிராமத்தில் ஊர் மக்கள் வியக்கும் வகையிலான திருமண ஊர்வலம் ஒன்று நடந்து முடிந்துள்ளது.

இதில், மணமகன் திருமண ஊர்வலத்தில் கார், குதிரை போன்றவற்றுக்கு பதிலாக, ஹெலிகாப்டரில் பறந்து சென்றனர்.

குரானா கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஹேம் மண்ட்லோய் மற்றும் யாஷ் மண்ட்லோய். அவர்களது குடும்பம் அந்த ஊரில் விவசாயம் செய்து வருகின்றது. உறவினர்களான இவர்கள் இருவரும், திருமண ஊர்வலத்திற்காக தங்களது ஜோடியை அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, அது எங்களுடைய மறைந்த தாத்தாவின் விருப்பம் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். தன்னுடைய பேரன்கள் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் சென்று, மணமகள்களை அழைத்து வரவேண்டும் என விரும்பினார். ஆனால் எங்கள் தாத்தா இன்று உயிருடன் இல்லை. இருந்தாலும் அவரது கனவை எங்களது தந்தைகள் நிறைவேற்றி விட்டனர். இது, தற்போது எங்களுடைய பாரம்பரியத்தில் ஒன்றாக கலந்து விட்டது.

இனி வருங்காலத்தில் எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்வோம் என கூறினர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கூடுதலான விசயம், மண்ட்லோய் குடும்பத்தில் இதற்கு முன்பு, அவர்களது முதல் மகனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்தபோதும், இதேபோன்று வாடகைக்கு ஹெலிகாப்டரை அமர்த்தி அதில் ஊர்வலம் அழைத்து வந்தனர். ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுக்க தற்போது ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தாத்தாவின் விருப்பத்திற்காக மணமகன்கள் ஹெலிகாப்டரில் பறந்து ஊர்வலம் சென்றது அப்பகுதியில் இப்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தானில் ஷெக்காவத்தி கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் ஹெலிகாப்டரில் ஊர்வலம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்