தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi: மீண்டும் எம்.பி., பதவி..நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி!

Rahul Gandhi: மீண்டும் எம்.பி., பதவி..நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி!

Karthikeyan S HT Tamil
Aug 07, 2023 12:03 PM IST

ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் வழங்கியுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி' என்று ராகுல் காந்தி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டதாக கூறி குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

பர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மார்ச் 23-ல் தீர்ப்பளித்தது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ராகுலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, சஞ்சய் குமார் அமர்வு, "இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் குறைவாக விதித்திருந்தாலும், எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டிருக்க முடியாது. இந்த தகுதி இழப்பால் ஏற்பட்ட விளைவுகள் தனிநபர் உரிமையை மட்டுமின்றி, அவரது தொகுதி மக்களையும் பாதித்துள்ளது. எனவே, 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது." என்று உத்தரவிட்டனர்.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ராகுலுக்கு மீண்டும் எம்பி பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்பி பதவியை மக்களவை செயலகம் இன்று (ஆகஸ்ட் 7) வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இந்நிலையில்,  தற்போது நாடாளுமன்றம் வந்துள்ளார் ராகுல்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்