தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi: பட்ஜெட் இப்படிதான் இருக்கும்!-பிரதமர் மோடி நம்பிக்கை

PM Modi: பட்ஜெட் இப்படிதான் இருக்கும்!-பிரதமர் மோடி நம்பிக்கை

Manigandan K T HT Tamil
Jan 31, 2023 01:34 PM IST

நாளை பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி
நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

நாளை பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இதுவே இவர் இந்த ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாக இருக்கும். இதுவரை 5 பட்ஜெட்களை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

இதையொட்டி, இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

முன்னதாக, நாடாளுமன்றம் வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.

நாட்டில் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் என பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை நிறைவேற்றுவதுடன், உலகமே இந்தியாவை உற்று நோக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருக்கும்.

இதற்கான அனைத்து முயற்சிகளையும் நிதி அமைச்சர் மேற்கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன்.

குடியரசுத் தலைவரின் உரை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெருமை, இந்தியா நாடாளுமன்ற அமைப்பின் பெருமை, மேலும் பெண்களை மதிக்கும் வாய்ப்பாகவும், நாட்டின் சிறந்த பழங்குடி மரபுகள் மதிப்பதாகவும் திகழும்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எப்போதும் 'இந்தியாவுக்கு முதலிடம், குடிமக்களுக்கு முதலிடம்' என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுகிறது, அதே உணர்வை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் காணலாம்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வாதப் பிரதிவாதங்கள் இருக்கும். பிரச்சனைகளை கவனமாக ஆய்வு செய்து எதிர்க்கட்சிகள் அவற்றை நன்றாக வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

தேசத்திற்கு நன்மை பயக்கும் கொள்கைகளை வகுப்பது குறித்து சபை விவாதிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன. 31 செவ்வாய்க்கிழமை தொடங்கி, முதல் பகுதி பிப்ரவரி 13-ஆம் தேதி நிறைவடைகிறது.

ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடையும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்காக நாடாளுமன்றம் மார்ச் 12ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்