சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்..இந்தியாவிற்கு ஆபத்தா? - மத்திய அரசு விளக்கம்!
சீனாவின் பறவைக் காய்ச்சல் மற்றும் குழந்தைகளிடையே மர்ம நிமோனியா வெடிப்பு ஆகிய இரண்டிலும் இந்தியாவுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனாவில் புதிதாகப் பரவிவரும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வகை கண்டறியப்படாத காய்ச்சல் காரணமாக சீன குழந்தைகளிடையே ஏற்படும் சுவாசக் கோளாறு பிரச்னையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச பிரச்னைகளின் பாதிப்பு ஆகிய இரண்டிலும் இந்தியாவிற்கான பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இருந்து வெளிப்படும் எந்தவொரு நெருக்கடியையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளிடையே மர்மமான சுவாச நோய் பரவுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மத்திய சுகாதார அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கடந்த சில வாரங்களில் சீனாவில் சுவாச நோய்களின் பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றானது, ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் மற்றும் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.