நரபலி, தெறிக்கும் ரத்தம்..தொடர்ந்த சர்ச்சை.. ஓராண்டிற்கு முன் லியோ படம் செய்த சம்பவங்கள் என்ன தெரியுமா?
நரபலி கொடுப்பதை மையமாக வைத்து அதிகளவில் வன்முறை காட்சிகளுடன் உருவாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறிய நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

கோலிவுட்டில் மாஸ் ஹீரோக்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர், தங்கள் ரசிகர்களைக் கவர படத்தில் அதிகளவு ஹீரோயிசம் காட்ட விரும்புகின்றனர், இதனால், இவர்களது படத்தை இயக்கும் இயக்குநர்களும் பெரும்பாலான இடத்தில் இவர்களது தேவையை பூர்த்தி செய்கின்றனர், ஆனால், சில நாட்களாக வன்முறை, போதைப் பழக்கம் மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான திரைப்படங்கள் அதிகரிப்பதை தவிர்க்கவும் முடிவதில்லை.
அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், ரத்தமும் சதையுமாக, வன்முறைகள் தெறிக்க தெறிக்க, போதைப் பொருட்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இதனால், அவர் இந்த உக்தியை தனது கைதி படத்திலிருந்து பிடித்துக் கொண்டு, அடுத்தடுத்த படங்களிலும் பின்பற்றி வருகிறார்.
தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் போதைப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில், பெரிய ஹீரோக்கள் சமீப காலங்களில் போதை பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பது போன்று வரும் சில திரைப்பட காட்சிகள் அவர்களுக்கு மேலும் உத்வேகம் அளிப்பது போல மாறிவிடுகிறது.