Lokesh kanagaraj: “மன உளைச்சலை தந்துட்டீங்க.. ஏன் இப்படி பண்றீங்க.. பயந்து நடுங்கி” - கதறும் லோகேஷ் கனகராஜ்
Lokesh kanagaraj: கடந்த 28ஆம் தேதியே ரஜினி சார் தொடர்பான காட்சிகள் அனைத்தையுமே எடுத்து அவரை அனுப்பிவிட்டோம். 29ஆம் தேதி காலை அவர் சென்னை வந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டார். இது எங்களுக்கு முன்னதாகவே தெரியும். - லோகேஷ் கனகராஜ்
ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதின் காரணமாக ‘கூலி’ படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் சிக்கலை சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவரே அது குறித்தான விளக்கத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ரஜினி சார் முன்பே சொல்லி விட்டார்
இது குறித்து அவர் பேசும் போது, “ரஜினி சார் இப்போது மிகவும் நன்றாக இருக்கிறார். நேற்று கூட அவருடன் நான் போனில் பேசினேன். இதுகுறித்து நானே விளக்கம் ஒன்று அளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ரஜினி சார் தனக்கு இதுபோன்று சிகிச்சை இருக்கிறது என்பதை, கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு முன்பாகவே படக்குழுவிடம் தெரிவித்துவிட்டார்.
அதற்கு ஏற்றவாறுதான் நாங்கள் ஷூட்டிங்கை திட்டமிட்டு இருந்தோம். காரணம், இந்தப்படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களது தேதிகள் அனைத்தும் இங்கு மிக முக்கியமானது. கடந்த 28ஆம் தேதியே ரஜினி சார் தொடர்பான காட்சிகள் அனைத்தையுமே எடுத்து அவரை அனுப்பிவிட்டோம். 29ஆம் தேதி காலை அவர் சென்னை வந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டார். இது எங்களுக்கு முன்னதாகவே தெரியும்.
பயந்து விட்டோம்:
ஆனால் youtube தளங்கள் மற்றும் இதர இணையதளங்களில் வந்த செய்திகள் அனைத்தையும் பார்த்த பொழுது, எங்களுக்கு பயமாக இருந்தது. ரஜினி சாரின் உடல் நலத்தை மீறி படமா..? என்றால் நிச்சயம் கிடையாது. ரஜினி சாரின் உடல் நலம்தான் இங்கு மிக முக்கியமானது. ஒருவேளை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உடல் நலம் சரியில்லாமல், ஏதாவது ஒரு சின்ன அறிகுறியை காட்டி இருந்தால் கூட, நாங்கள் அனைவரும் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் வாசல் முன்னால் நின்று இருப்போம்.
சன் பிக்சர்ஸ் போன்ற ஒரு தயாரிப்பு நிறுவனம், இது போன்று ஒரு ஹீரோவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தால், நிச்சயமாக எங்களுக்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு பணம் தந்திருக்காது. அனைவரையும் அழைத்து முதலில் இந்த விஷயத்தை கவனிக்கச் சொல்வார்கள். ஆனால், யூடியூபில் பேசுகிறவர்கள் ஏதோ பக்கத்தில் இருந்துஅவருக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை பார்த்தது போல மிகவும் உறுதியாக பேசினார்கள். அதை பார்த்த போது நாங்கள் நடுங்கி விட்டோம். அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சளை தந்துவிட்டது. ரஜினி சார் சொல்வதை தான் நான் இங்கு சொல்கிறேன் ஆண்டவன் அருளால் அவருக்கு ஒன்றுமே ஆகாது. தயவுசெய்து எந்த விஷயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு விசாரித்து, தகவலை கேட்ட பின்னர் செய்திகளை வெளியிடுங்கள். இதுதான் நான் உங்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை” என்று பேசினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். இப்படம் ரஜினிகாந்தின் திரை வரிசையில் 171ஆவது படமாக வருகிறது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தில் அவர் தேவா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கூலி திரைப்படத்தில் ரஜினியுடன், மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள நடிகர் செளபின் சாஹீர், தயாள் என்னும் கதாபாத்திரத்திலும், தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா, சைமன் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். அதேபோல், நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதி ஹாசன் பிரீத்தி என்னும் கதாபாத்திரத்திலும், நடிகர் சத்யராஜ் ராஜசேகர் என்னும் கதாபாத்திரத்திலும், முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா, காளீஸா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்