தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Garudan Movie Review: ‘ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்தாரா சூரி?’ கருடன் வானில் வட்டமிட்டதா? பறக்க திட்டமிட்டதா? முழு விமர்சனம்!

Garudan Movie Review: ‘ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்தாரா சூரி?’ கருடன் வானில் வட்டமிட்டதா? பறக்க திட்டமிட்டதா? முழு விமர்சனம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
May 31, 2024 08:40 AM IST

Garudan Movie Review: விஸ்வாசத்திற்கும் நியாயத்திற்கும் இடையே நடக்கும் போரில் சொக்கனாக வரும் கருடன் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் பயணம். அதை அருமையாக செய்திருக்கிறார் சூரி. சமுத்திரக்கனி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் தேர்வு தான் இயக்குனர் துரை செந்தில்குமாரின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Garudan Movie Review: ‘ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்தாரா சூரி?’ கருடன் வானில் வட்டமிட்டதா? பறக்க திட்டமிட்டதா?
Garudan Movie Review: ‘ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்தாரா சூரி?’ கருடன் வானில் வட்டமிட்டதா? பறக்க திட்டமிட்டதா?

ட்ரெண்டிங் செய்திகள்

கருடன் கதை என்ன?

கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார் ஒரு அரசியல்வாதி. ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி, இடத்தை எப்படியாவது தன்வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார் அரசியல்வாதியாக நடிக்கும் ஆர்.வி.உதயக்குமார். அதே ஊரில் இரு நண்பர்கள் இணைபிரியா நட்புடன் இருக்கிறார்கள். 

அந்த இரு நண்பர்களில் ஒருவர் சசிக்குமார், மற்றொருவர் உன்னி முகுந்தன். உன்னியின் நிழலாக, அவருக்கு விஸ்வாசமாக இருப்பவர் தான் சொக்கன். அந்த சொக்கன் தான் சூரி.பத்திரத்தை கைப்பற்ற அரசியல்வாதியாக ஆர்.வி.உதயக்குமார் என்னென்ன செய்கிறார், என்ன மாதிரி திட்டமிடுகிறார், அதற்காக என்ன மாதிரியாக சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் படத்தின் முழு கதை!

என்ன செய்திருக்கிறார் சூரி?

 சூரி என்பதை விட, சொக்கன் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தில் கனமாக இருக்கிறார். நகைச்சுவை, ஹீரோயிசம், நடிகன் என பல முகங்களை களமிறக்கி, புதிய சூரியாக வந்திருக்கிறார் ‘ஹீரோ’ சூரி. துரை செந்தில்குமாரின் இயக்கம் அருமையாக உள்ளது. திரைக்கதையை சிறப்பாக கையாண்டு, அதன் மூலம் படத்தின் வெற்றிக்கு தேவையான அனைத்தையும் அள்ளி வந்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி முழுக்க கலகலப்பாக நகரும் திரைப்படம், இடைவேளை நெருங்கும் போது கதையை விறுவிறுப்பாகிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சமும் சலிப்பு இல்லாத வகையில் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அதிலும் கடைசி 30 நிமிடங்கள் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள், யூகத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்கிறது. படம் பார்க்கும் அனைவரும் ரசிக்கலாம் என்கிற மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

மற்ற கதாபாத்திரங்கள் எப்படி?

சசிக்குமார் வழக்கமான நண்பன் டெம்ப்ளேட்டில் வருகிறார். மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நன்றாக நடித்தாலும், வசனங்களில் மலையாளம் கலந்து விடக்கூடாது என்பதற்காக மெனக்கெடுவது தெரிகிறது. அதுவே சில இடங்களில் குறையாக தெரிகிறது. 4 பேரை சுற்றி நடக்கும் கதையில், கதாநாயாகிக்கும் பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், தேவையான அளவிற்கு அழைத்து வந்ததற்கு பாராட்டலாம். அதிலும் ஷிவதாவின் நடிப்பு, அவரை இன்னொரு ரவுண்ட் தமிழில் அழைத்து வரும் என்று கூட கூறலாம். 

படத்தின் பெரிய பலம், கேமரா. ஒளிப்பதிவில் இரவு, பகல் என அனைத்தும் அப்படியே வருகிறது. அந்த வகையில் ஆர்தர் வில்சனின் கேமரா, படத்தின் பலத்தின் பாதியை தாங்கியிருக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்திற்கு பெரிய பலம். மீண்டும் யுவன் ரீ எண்ட்ரி என்று கூட கூறலாம். டெக்னிக்கலாகவும் சரி, திரைக்கதையாகவும் சரி, கருடன் பார்த்து ரசிக்கும் படியாக இருப்பது ஆரோக்கியமான விசயம். கிராம பின்னணியில் இப்படி ஒரு படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்கிற மனக்குறையை கருடன் தீர்த்துவிட்டது என்று தான் கூற வேண்டும். 

சொக்கனின் பங்கு என்ன?

விஸ்வாசத்திற்கும் நியாயத்திற்கும் இடையே நடக்கும் போரில் சொக்கனாக வரும் கருடன் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் பயணம். அதை அருமையாக செய்திருக்கிறார் சூரி. சமுத்திரக்கனி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் தேர்வு தான் இயக்குனர் துரை செந்தில்குமாரின் வெற்றிக்கு முக்கிய காரணம். அருமையான கதை களத்தை, சிறப்பாக கதாபாத்திரங்கள் மூலம் நிரப்பியதிலேயே துரை செந்தில்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்