Actor Soori: ’என் பேரே இல்ல! ஓட்டுப்போட முடியல!’ நடிகர் சூரி வெளியிட்ட வேதனை வீடியோ!
”எனது மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. ஆனால் எனது பெயர் பட்டியலில் இல்லை”
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தன்னால் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி கூறி உள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஜனநாயக உரிமையை செலுத்த வந்தேன், கடந்த எல்லா தேர்தல்களிலும் எனது உரிமையை செலுத்தி இருந்தேன். ஆனால் இந்த பூத்தில் எனது பெயர் இல்லை என்று சொல்லி உள்ளார்கள். ஓட்டு முடியவில்லை எனும் போது மனம் வேதனையாக உள்ளது. இதில் எனது மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. ஆனால் எனது பெயர் பட்டியலில் இல்லை.
இது எங்கே யாரால் தவறு நடந்தது என தெரியவில்லை. தயவு செய்து அனைவரும் போய் சென்று ஓட்டுப்போடுங்கள். நான் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக எனது வாக்கை செலுத்துவேன் நம்புகிறேன் என கூறி உள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் சூரி கூறுகையில், பெரியர் ஏமாற்றமாக உள்ளது. எனது ஜனநாயக கடமையை நான் செலுத்த செல்லும் போது எனது பெயர் விடுபட்டு போச்சு. அங்கு உள்ளவர்களிடம் கேட்டபோது தெரியவில்லை என்கிறார்கள், ஒரே வீட்டில் வசிக்கும் எனது மனைவிக்கு ஓட்டு உள்ளது, ஆனால் எனக்கு ஓட்டு இல்லை. பக்கத்து பூத்திற்கு சென்று கூட போய் பார்த்தேன் ஆனால் அதில் எனது பெயர் இல்லை.
இந்த தவறு ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. பலருக்கு பெயர் விடுபட்டு உள்ளது என சொல்கிறார்கள். அதிகாரிகள் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் நம்புகிறோம் என தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.