தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘வெற்றி.. வெற்றி.. வெற்றி..’ யாருக்கு? யாருக்கோ..! சக்சஸ் விழா கொண்டாடிய எக்கோ டீம்!

‘வெற்றி.. வெற்றி.. வெற்றி..’ யாருக்கு? யாருக்கோ..! சக்சஸ் விழா கொண்டாடிய எக்கோ டீம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 04, 2023 11:57 AM IST

ரிலீஸ் செய்த படத்திற்கு எல்லாம் சக்சஸ் மீட் வைத்தால், உண்மையான சக்சஸ் எது என்கிற குழப்பம் வராமல் இருக்குமா?

வெற்றி கொண்டாட்டத்தில் எக்கோ டீம்
வெற்றி கொண்டாட்டத்தில் எக்கோ டீம்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால், அது 100 நாட்களை கடந்தால் தான் வெற்றி விழா கொண்டாடும் வழக்கம் இருந்தது. இன்னும் சொல்லப் போனால், 175 நாள், 200 நாள், 300 நாள் என்று கூட ஓடி, வெற்றி விழா கொண்டாடிய படங்கள் இங்கு நிறைய உண்டு. 

தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்தது அதிகரித்தப் பின், 25 நாட்கள் ஓடினாலே பெரிய சாதனை என்று பார்க்கப்பட்டது. காரணம், 100 நாட்கள் ஓடு வசூலிக்கும் பணத்தை, 25 நாட்களில் அந்த படம் வசூலிக்கும் என்கிற மாற்றம் ஏற்பட்டது. 

பிறகு அதுவும் மாறி, 15 நாட்களை தாண்டியதும் வீட்டுக்கே ஓடிடி வழியாக படங்கள் வரத் தொடங்கியதால், அதற்குள் அந்த படத்தின் அறுவடையை தியேட்டரில் முடிக்க, சம்மந்தப்பட்ட படத்தை வெற்றிப் படமாக காட்டி, மக்களை இழுக்க, படம் ரிலீஸ் ஆன மறுநாளே ‘வெற்றிக் கொண்டாட்டம்’ ஏற்பாடு செய்யத் தொடங்கியது தமிழ் சினிமா.

ஒரு படம் எப்படி கலெக்‌ஷன் ஆகிறது என்பதை பார்க்கவே குறைந்தது 4 நாளாவது ஆகும். ஆனால், ‘வெற்றி.. வெற்றி..’ என அவர்களாகவே காசியப்பன் கடை வெங்கலக்கோப்பையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். 

சரி, இதையெல்லாம் நன்கு அறிந்து, ஓரளவிற்கு பிரபலமான சில படங்கள் செய்வதை பார்த்து வந்தோம். திடீரென நேற்று ஒரு அதிர்ச்சி பெரும்பாலானோருக்கு இணைவழியாக வந்தது. ‘எக்கோ’ என்கிற படத்தின் சக்சஸ் மீட்டில் அதன் ஹீரோ ஸ்ரீகாந்த், இயக்குனர் நவீன் கணேஷ், ஹாரூன். இசையமைப்பாளர் நரேன் பாலக்குமார் ஆகியோர் பங்கேற்று , கேக் வெட்டியுள்ளனர். 

மகிழ்ச்சியை கேக் வெட்டி வெளிப்படுத்துவதில் பிரச்னை இல்லை. ஆனால், எக்கோ என்கிற படம், எப்போது வந்தது? எப்போது வெற்றியானது? என்பதே பலருக்கு தெரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் வந்ததா என்பதே தெரியவில்லை. 

ஸ்ரீகாந்த் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இளம் நடிகர் தான். ஆனால், பிந்நாளில் அவர் மார்க்கெட் இழந்தார் என்கிற கசப்பான உண்மையை மறுப்பதற்கில்லை. அவர் வெற்றி பெற வேண்டும், அவரைப் போன்ற எல்லா நடிகர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. 

அதற்காக, ரிலீஸ் செய்த படத்திற்கு எல்லாம் சக்சஸ் மீட் வைத்தால், உண்மையான சக்சஸ் எது என்கிற குழப்பம் வராமல் இருக்குமா? படத்தை ப்ரோமோட் செய்ய நினைத்திருந்தால், படம் வெளியாகும் முன்பே கூட, ‘சக்சஸ் மீட்’ நடத்தலாம். இது இன்னும் கூட கவனிக்கப்படும். அதற்காக அறியாத ஒரு படத்திற்கு சக்சஸ் மீட் வைப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். 

எது எப்படியோ, எப்போது ரிலீஸ் ஆனது என்பது கூட தெரியாத ஒரு படத்தின் சக்சஸ் மீட், அந்த படத்தை பற்றிய தகவல்களை தேடிப்பார்க்க வைத்தது. அதன் படி, ஜூலை 21 ம் தேதி எக்கோ ரிலீஸ் ஆகியிருக்கிறது. இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். ஒரு மணி நேரம் 50 நிமிடம் ஓடும் ஹாலிவுட் டைம்மிங் படம். வேறு என்ன சொல்றது.. ‘வெற்றி.. வெற்றி..’ யாருக்கு? யாருக்கோ என்று, கடக்க வேண்டியது தான்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்