ஸ்லீப்பர் செல்.. கிருஷ்ண பரமாத்மா.. பாவம்.. நம்பிக்கை.. அழுகை.. முதல் டாஸ்கிற்காக தலைவிரித்தாடும் சண்டை
கேர்ள்ஸ் vs பாய்ஸ் முதல் டாஸ்க்கில் தங்கள் அணி சார்பாக விளையாடப்போகும் நபரை தேர்ந்தெடுக்கும் போதே பிக்பாஸ் பெண்கள் அணியில் சண்டை தலைவிரித்து ஆடத் தொடங்கியது.
பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் நடந்த பிறகு போட்டியாளர்களுக்கான முதல் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களா பெண்களா என நடக்கும் இந்தப் போட்டிக்கான விதிமுறைகளை தீபக் வாசித்தார். இதையடுத்து இரு அணிகளும் தங்கள் அணி சார்பில் விளையாடப்போகும் அந்த நபர் யார் என்பது குறித்த ஆலோசனையில் இரு அணிகளும் ஈடுபட்டனர். ஆண்கள் அணியில் இதுகுறித்து அனைவரும் மிக நுணுக்கமாக, என்ன செய்ய வேண்டும், என்ன நடக்கும் என விவாதித்து வந்தனர்.
ஆனால் அதற்கு நேர் மாறாக, பெண்கள் அணியில் சண்டை, யார் சரி, யாருக்கு வாக்களிப்பது, பாவம் பார்ப்பது என சண்டையும் சச்சரவுமாக இருந்தது. பெண்கள் அணியிலிருந்து தான் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பவித்ரா ஜனனி, அன்ஷிதா, தர்ஷா குப்தா என மூவரும் தங்கள் பக்கத்து நியாயத்தை சொல்லி வந்தனர்.
பேச்சுதான் ஒரு மாதிரி இருக்கும் மத்தபடி
முதலில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை கச்சிதமாக தன்னால் செய்ய முடியும். ஆண்கள் அணியிலிருப்பவர்கள் எனக்கு விளையாட்டே புரியவில்லை என கூறுகின்றனர். எனக்கு எல்லாம் புரியும். எனக்கு முழுவதுமாக தமிழ் தெரியாததால், நான் பேசுவது ஒரு மாதிரியாக இருக்குமே தவிர நான் நன்றாக விளையாடுவேன். இங்கு யாருக்கும் டீம் முக்கியமாக தெரியவில்லை. எல்லோரும் தனித்தனியாக கேம் விளையாட வேண்டும் என நினைக்கிறீர்கள். இங்கு நடந்த வோட்டிங் முறையே தவறு. பெண்கள் அணியின் சார்பில் அனுப்பப்படும் நபர் அணிக்காக முதலில் விளையாடுவாரா என்பதை உறுதிப்படுத்திய பின்னே அவரை, நம் டீம் சார்பில் தேர்ந்தெடுக்க வேண்டும் என அன்ஷிதா தனது கருத்தை மிகவும் கோவமாக கூறினார்.
ஸ்லீபர் செல்
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே தனது கருத்தை திணிப்பது போல் கூறிவரும் பவித்ரா ஜனனி, இந்த போட்டியில் நான் விளையாடினால் மட்டுமே சரியாக இருக்கும் என அனைவரிடமும் வாதிடத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், நான் நிச்சயம் கேர்ள்ஸ் டீமின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பேன், இதுவரை நான் பெண்கள் டீமிற்கு சப்போர்ட்டாக இருக்கிறேன், எனக்கு ஆண்கள் அணியில் இருக்கும் அனைவரையும் தெரியும். அதே சமயம் நீங்கள் என்ன நினைக்குறீங்க என்பதும் நல்லாவே தெரியும். நான் விளையாட போன பிறகு மாற மாட்டேன். அதுமட்டுமின்றி, நான் அங்கு போன உடன் நாமினேட் செய்யும் முதல் ஆளும் ஆணாகத்தான் இருப்பார். ஏனெனில் அவர்கள் தான் நாமினேட் செய்யக்கூடாது என்ற நிபந்தனை வைத்துள்ளனர். அதனால், அதை முறியடிப்பேன் என்றார்.
முடித்துவிட்ட ஜாக்குலின்
மேலும், அவர் ஆண்கள் அணியினர் என்மேல் கொஞ்சம் பாவம் பார்ப்பார்கள் அதை வைத்தும் அவர்களது ஆட்டத்தை முடித்துவிடலாம் என அவர் கூறியது அங்கு பிரச்சனையை வெடிக்கச் செய்தது. பாவம் பார்த்து யாரும் போட்டியில் விளையாட வேண்டாம். மிகவும் திறமையான போட்டியாளர் தான் வேண்டும் என ஜாக்குலின் கூற இருவருக்கும் சண்டை வெடித்தது. இதையடுத்து, நான் போட்டிக்கு போகவில்லை. என்னை யாரும் பாவம் பார்த்து அனுப்பி வைக்க வேண்டாம் என அழுதுகொண்டே பவித்ரா அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
என் பின்னாலே வருவார்கள்
இதையடுத்து, தர்ஷாவோ, ஆண்கள் அணியிலுள்ள அனைவரையும் எனக்கு நன்றாகவே தெரியும். நேற்று நான் அதிக நேரம் ரவீந்தரிடம் பேசினேன். ஜெஃப்ரியும் என்னை அக்கா அக்கா என பேசி வருகிறான். சத்யாவும் அந்த அளவுக்கு பெரிதாக தெரியவில்லை. எனவே, அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதால் நானே ஆண்கள் அணிக்கு செல்கிறேன் எனக் கூறினார்.
பாவம் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட பவித்ரா
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்ஷிதாவும், சுனிதாவும் பொங்கி எழுந்து பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லை. எடுக்கும் முடிவும் தவறாகவே இருக்கிறது எனக் கூறினர். அந்த சமயத்தில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்கும் தர்ஷிகாவோ இந்த முடிவில் நான் தலையிட மாட்டேன். நான் பாரபட்சம் பார்ப்பதாக கூறிவிடுவீர்கள் என ஒதுங்கிவிட்டார்.
இதையடுத்து, அழுது கோபித்துக் கொண்ட பவித்ராவை சமாதானப்படுத்திய தர்ஷா பாவம் பார்த்து அவரையே அணுப்பலாம் என கூறிவிட்டார்.
கிருஷ்ண பரமாத்மாவான ரவீந்தர்
ஆனால், இதற்கு அப்படியே நேர்மாறாக, ஆண்கள் அணி எப்படி செயல்பட வேண்டும், பெண்கள் எப்படி நம்மை நடத்துவர் என்பதை அனைவரும் தெள்ளத் தெளிவாக பேசியதுடன், ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டு, ரவீந்தர், முத்துக் குமரன், தீபக், அருண், ரஞ்சித் உள்ளிட்ட அனைவரும் ஆலோசனை செய்தனர். பின்னர், சதுரங்க ஆட்டத்தில் நாம் எப்படி காய் நகர்த்த வேண்டும் என முடிவெடுத்தும், ரவீந்தரின் இத்தனை வருட பிக்பாஸ் அனுபவத்தில் பெண்களை சீண்டினால் என்ன நடக்கும் என்பதை போதனையாக பெற்றும் முத்துக்குமரன் ஆண்கள் அணியின் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.
இரு போட்டியாளர்களை தேர்வு செய்ய அனைவரும் மாங்கு மாங்கென்று பேசிக் கொண்டிருக்கும் போது, அர்னவ், தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதனை, முத்துக் குமரன் கிண்டலடிக்கவும் செய்துள்ளார்.