அனுஷ்காவே வியந்து பாராட்டிய சீரியல் நடிகை.. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் அந்த நடிகை யார்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தை ஏற்று, தற்போது தன் நடிப்பினால், தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருக்கும் நபர் தான் நடிகை பவித்ரா ஜனனி. தற்போது பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் செல்லும் இவரைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், சீரியலுக்கு நடிக்க வருவோர் சினிமாவிற்கு இணையாக தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அவ்வாறு தன்னை மெருகேற்றிக் கொள்பவர்களை ரசிகர்கள் சூழ்ந்து விடுகின்றனர். அப்படி தனக்கான ரசிகர் படையை திரட்டி வைத்திருப்பவர் தான் பவித்ரா ஜனனி. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது அவரது புகைப்படங்களை பதிவேற்றி வருவார். அதுமட்டுமின்றி, 30 வயதிற்கு மேலாகும் இவர், திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை எனவும் கூறி அவரது ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளார்.
ஆபிஸ் நாடகத்தில் தொடங்கிய பயணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்த சீரியலில் சிறு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து விஜய் டிவிக்குள் வந்தவர் தான் பவித்ரா ஜனனி. பின், சரவணன் மீனாட்சி நாடகத்திலும் நடித்தார். இவை இரண்டும் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவு பவித்ராவிற்கு வெளிச்சத்தை தரவில்லை. இந்நிலையில் தான், இவர் ஈரமான ரோஜாவே எனும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஹிட் கொடுத்த ஈரமான ரோஜாவே
சூழ்நிலையின் காரணமாக, தான் காதலித்தவரின் சகோதரனையே திருமணம் செய்ய நேரிடும் ஒரு பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் பவித்ரா ஜனனி. முதலில் இந்த நாடகத்திற்கு அதிக அளவு மக்களிடம் வரவேற்பு இல்லாத நிலையில், போகப்போக இதன் கதை மக்களை வெகுவாக இழுத்தது. கோவம், சோகம், ஏக்கம் என அனைத்தையும் கலந்து தன் நடிப்புத் திறனை இந்த நாடகத்தில் பதிவு செய்திருப்பார் பவித்ரா.
இந்த நாடகம் மாபெரும் வெற்றி பெற்ற காரணத்தாலே, இதன் 2ம் பாகமும் எடுத்தனர். அதிலும், பவித்ராவிற்கு ஜோடியாக வந்த திரவியம் நடித்திருப்பார்.
விவாதத்தை கிளப்பிய நாடகம்
இந்த நிலையில், வேறு நாடகத்தில் நடிக்காமல் இருந்த பவித்ராவிற்கு வந்த ஜாக்பாட் தான் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல். வெளிநாட்டில் படித்து வேலை செய்துகொண்டிருக்கும், நமது சாங்கிய சம்பிரதாயங்களை மதிக்கும் பெண்ணாக இந்தத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் பவித்ரா. இவருக்கும், கடவுள் நம்பிக்கையற்ற, எதார்த்தம் பேசும் நபரான கதாநாயகனுக்கும் நடக்கும் சண்டையில், கதாநாயகன், பவித்ராவிற்கு தாலி கட்டி விடுகிறார்.
தாலி கட்டிய கணவனே கண்கண்ட தெய்வம் என அன்றே வேலை, படிப்பு அனைத்தையும் விட்டுவிட்டு கணவரின் வீடு தேடி வருகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் கதைதான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த நாடகத்தில் படித்த நல்ல வேலையில் உள்ள பெண்ணாக மட்டுமின்றி, நேர்மையான நீதிபதியின் மகளாகவும் நடித்திருப்பார் பவித்ரா.
இந்த நாடகத்திற்கான அறிவிப்பு வந்தபோது பல எதிர்ப்புகள் வலுவாக வந்தது. நாடகத்தின் மூலம் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதாக பல தரப்பிலிருந்தும் புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது. இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, பல கோணங்களில் நாடகத்தின் கதை மாறியது.
மாறுபட்ட நடிப்பு
பிடிக்காத கணவரை சுற்றி சுற்றி வரும் பெண்ணாக, வெண்டைக்காயை கூட ஸ்கேல் வைத்து கட் செய்யும் அப்பாவியாக, குடும்பத்தாருக்கு நல்ல மருமகளாக என ஒரே சமயத்தில் பல விதமாக தனது நடிப்பை வழங்கி இருப்பார்.
ஈரமான ரோஜாவே நாடகத்தைக் காட்டிலும் இந்த நாடகத்தில் தனது மாறுபட்ட நடிப்பை வழங்கி இருப்பார். பின், கணவர் பக்கம் உள்ள நியாயம் தெரியாமல் அவர் மீது புகாரளிப்பது, பின் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வது, பிறரின் நலனுக்காக சொன்ன பொய்யால், கணவரை விட்டு விலகி சென்று கலெக்டர் ஆவது என நடிப்பில் அசத்தி இருப்பார்.
பாராட்டிய அனுஷ்கா
பின், அவர் கணவரை மன்னித்தாரா, அவரை ஏற்றுக் கொண்டாரா என செல்லும் நாடகத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார் நடிகை அனுஷ்கா. இதுதொடர்பாக நடிகை பவித்ரா ஜனனிக்கு போன் செய்து பேசிய அனஷ்கா, தான் தொடர்ந்து இந்த சீரியலை பார்ப்பதாகவும், அதில் உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக உள்ளதாகவும் பாராட்டினார். இதனால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற பவித்ரா, அனுஷ்காவின் பாரட்டுகள் அனைத்தும் இதையத்தில் இடம் பெற்றிருக்கும் எனக் கூறியிருந்தார்.
பிக்பாஸ் வீடு
தென்றல் வந்து என்னைத் தொடும் நாடகம் முடிந்தே சுமார் ஒரு வருடம் ஆன நிலையில், நடிகை பவித்ரா ஜனனி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர், நடிப்பில் பலரிடம் அப்லாஸ் வாங்கி இருந்தாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன செய்ய போகிறார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.