விஜய்க்கு அரசியலில் ரீச் கிடைக்க 2 குதிரைகளில் பயணிக்கணும்.. அனுபவ பாடத்தை பகிரும் அரசியல்வாதி நடிகர்!
நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்த பிறகு பலரும் அவர் இனி என்ன செய்தால் நன்றாக இருக்கும் என கூறிவரும் நிலையில், தன்னுடைய அனுபவத்தின் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர், உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அறிவிப்போடு நிறுத்திவிடாமல், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சி, கட்சிக்கான கொடி, கட்சிப் பாடல் போன்றவற்றை அறிமுகம் செய்தார். பின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, முதல் மாநாடு என கட்சிப் பணிகளில் பரபரப்பாக ஈடுபடுகிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு குதிரை..
அதேசமயத்தில், இந்தப் பணிகளுக்கு சினிமா குறுக்கீடாதக இருக்குமோ என எண்ணிய விஜய் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்தார். அவர் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணம் செய்ய விரும்பவில்லை போல. இதையடுத்து, தான் அரசியல் அறிவிப்பை வெளியிடும் முன்பே ஒப்புக் கொண்ட ஒரு படத்தில் மட்டும் கடைசியாக நடித்து கொடுப்பதாகவும், பின் முழுநேர அரசியல் பணிகளை மேற்கொள்வதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.
விஜய் அரசியல் நிலைப்பாடு
கட்சியின் கொள்கைகளை தற்போதுவரை விஜய் வெளியிடாத நிலையில், தந்தை பெரியாருக்கு அவரது பிறந்த நாள் அன்று மரியாதை செலுத்தியது, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து கூறாதது என பலவற்றை டிகோட் செய்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் விஜய்யின் கட்சி நிலைப்பாடு இதுதான். அவரின் கொள்கை இதுதான் என பேசி வருகின்றனர். இதற்கு அறிக்கை மூலம் விஜய் பதிலடி கொடுத்தாலும், பேச்சுகள் குறைந்த வண்ணம் இல்லை.
நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் கருத்து
இந்த நிலையில் தான், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர் கார்த்திக், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அந்த வகையில், தம்பி விஜய்யும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர் சினிமாவில் பீக்கில் இருக்கும் போது அரசியலுக்கு வருவது மிகவும் பெரிய விஷயம்.
சினிமாவில் நடிக்க வேண்டும்
அவரது ரசிகர்களைப் போல நானும், அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் படங்களில் நடித்துக் கொண்டே அரசியலில் பயணிக்கலாம். அதுமட்டுமின்றி, விஜய் தனது கட்சியின் நிலைப்பாட்டையும், மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கருத்துகளையும் சினிமா திரைகளின் மூலம் கொண்டு செல்லலாம். இது அவருக்கு மக்களிடம் பெரிய ரீச்சை அளிக்கும் என்றார்.
அரசியலில் சறுக்கல்
இவரின் இந்தக் கருத்துகளை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். காரணம் நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக், சினிமா துறையிலிருந்து வந்து அரசியல் பணிகளை மேற்கொண்டவர். அதிலும், அரசியலில் பல சறுக்கல்களைக் கண்டவர்.
நடிகர் விஜய்யைப் போல நடிகர் கார்த்திக்கும் சினிமாவில் பிஸியாக இருந்த சமயத்தில் தான் அரசியலுக்கு வந்தார். அப்போது அவர் , 'அனைத்திந்திய பார்வார்டு பிளாக்' எனும் கட்சி மூலம் அரசியல் பயணத்தை துவங்கினார். அக்கட்சியின் மாநில தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். பின்னர் அந்தக் கட்சியை கலைத்த அவர், நாடாளும் மக்கள் கட்சி எனும் புதிய கட்சியை துவங்கி அதையும் கலைத்தார்.
தற்போது அவர் 'மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியை துவங்கி அதில் தன் பயணத்தை கொண்டு செல்கிறார். இப்படி சினிமாவில் பீக்கில் இருந்த நடிகர் கார்த்திக் கட்சியையும் கூட்டணியையும் வைத்துக் கொண்டு பெரும் சறுக்கலையும் சந்தித்தார். ஒரு நடிகராக மக்களின் மனதை அவர் ஜெயித்த அளவுக்கு ஒரு அரசியல்வாதியாக ஜொலிக்கவும் ஜெயிக்கவும் முடியவில்லை.
எம்ஜிஆர் பாணி அரசியல்
இந்த நிலையில் தான், நடிகர் கார்த்திக் தனது அனுபத்தின் மூலம் சினிமாவில் தொடர்ந்து நடித்து அவரது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கூறிவருகிறார். அதுமட்டுமன்றி, மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கூட சினமா மூலம் தனது கட்சியின் கொள்கைகளையும், கருத்துகளையும் மக்களிடம் பரப்பி அரசியலில் ஜொலித்தவர் தான். ஒருவேளை, நடிகர் கார்த்திக் இதை மனதில் வைத்து கூட நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்திருக்கலாம்.