HBD Actor Karthik: யதார்த்தமான நடிப்பு..விதவிதமான கேரக்டர்களில் அசத்திய நவரச நாயகன்..நடிகர் கார்த்திக்கின் கதை!
HBD Actor Karthik: 'அலைகள் ஓய்வதில்லை' படங்கள் மூலம் பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக்கின் அலை இன்னும் ஓயவே இல்லை. படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் பல ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கவே முடியாது.

HBD Actor Karthik: நவரச நாயகன்' என தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கார்த்திக் இன்று (செப்டம்பர் 13) தனது 64 பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது திரை வாழ்க்கை குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். இவரது உண்மையான பெயர் முரளி கார்த்திகேயன் முத்துராமன் ஆகும். 1980களில் 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தில் இளமையான தோற்றத்தோடு அறிமுகமான கார்த்திக், முதல் திரைப்படத்திலேயே தனக்கு வழங்கப்பட்ட விச்சு கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பாரதிராஜா இயக்கிய இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு கார்த்திக்குக்கு தமிழக அரசின் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதையும் பெற்றுத் தந்தது.
யதார்த்தமான நடிப்பு
மிக அற்புதமாக கதாபாத்திரத்தை உள்வாங்கி, ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பேரெடுத்தார் நடிகர் கார்த்திக். நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் டியாக்ஷன். இவை எல்லாமே கார்த்திக்கை நவசர நாயகனாக உயர்த்தியது. 'கோபுர வாசலிலே', 'வருஷம் 16', 'பாண்டி நாட்டு தங்கம்', 'சொல்லத்துடிக்குது மனசு', 'நாடோடி பாட்டுக்காரன்' என்று கார்த்திக்கின் படங்களும் ஹிட்டு. பாடல்களும் அமர்க்களம். படமும் நூறுநாள், இருநூறு நாள் ஓடியது.