HT Elections Story: ‘நாடாளுமன்றத் தேர்தல் 1977’ மண்ணை கவ்விய இந்திரா! மாற்றாய் வந்த மொரார்ஜி தேசாய்!
”ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும், அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தியும் தோல்வி அடைந்தனர்”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்ட நிலையில் நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் களத்தை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இந்திய குடியரசு
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
காங்கிரஸின் தொடர் வெற்றிகள்
1952, 1957, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத்தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆகி இருந்தார். 1967 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
இந்திரா காந்தியின் எழுச்சி
1969 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காங்கிரஸ் என்றும் இரண்டாக பிரிந்தது. 1971ஆம் ஆண்டில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்த இந்திரா காந்தி, 352 தொகுதிகளில் வென்று மீண்டும் பிரதமர் ஆனார்.
அவசர நிலை பிரகடனம்
இருப்பினும் அவரது மக்கள் செல்வாக்கு படிப்படியாக குறையத் தொடங்கியது. முந்தைய தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயணன் என்பவர் தேர்தல் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிரதமர் இந்திரா காந்தி தேர்தல் பரப்புரைக்காக அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என 1975ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் அறிவித்தது. இதனால் பிரதமர் பதவியை இந்திரா காந்தி இழக்கும் சூழல் உருவானது. இந்திரா தன் பதவியைத் தக்க வைக்க நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
மக்களை மிரட்டிய மிசா சட்டம்
நாட்டிற்கு எதிரான தேச விரோத சக்திகள் அதிகரித்துவிட்டதாகவும், நாட்டில் வறுமையை குறைக்க 6 அம்ச திட்டத்தை கொண்டு வருவதாகவும் இந்திரா அறிவித்தார்.
இதன் எதிரொலியாக யாரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கும் மிசா சட்டம் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் பல அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன.
அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து எழுத பத்திரிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அரசே பத்திரிக்கைகளை தணிக்கை செய்தனது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. நெருக்கடி நிலையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் கலைக்கப்பட்டது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த பலருக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது வட இந்தியாவில் இந்திரா காந்தி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
ஜெயப்பிரகாஷ் நாராயணனி மக்கள் இயக்கம்
நெருக்கடி நிலை கொடுமைகளை எதிர்த்து சோசலிசக் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஒரு பெரும் மக்கள் இயக்கம் உருவானது. 1976ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் ஒரு ஆண்டுத் தள்ளிப்போனது.
ஜனதா கட்சி உருவாக்கம்
தனிப்பெரும் தலைவராக இருந்த இந்திரா காந்தியை எதிர்க்க ஸ்தாபன காங்கிரஸ், பாரதீய ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோசலிசக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின.
இந்திராவை வீழ்த்திய மக்கள்!
இந்திரா காந்தி அரசு மீதான பெரும் மக்கள் அதிருப்தியால் ஜனதா கட்சி 295 இடங்களில் வென்றது. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும், அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தியும் தோல்வி அடைந்தனர்.
நாடு விடுதலை அடைந்த பிறகு காங்கிரஸ் அல்லாத முதல் அரசின் பிரதமராக 81ஆவது வயதில் மொராஜி தேசாய் பொறுப்பேற்றார்.
காங்கிரஸை காப்பாற்றிய தென் மாநிலங்கள்
வட இந்தியா முழுவதும் இந்திரா காந்திக்கு எதிரான அலை இருந்தாலும், இது தென் மாநிலங்களில் பெரியதாக எதிரொலிக்கவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் பெருவாரியான இடங்களை காங்கிரஸ் கட்சியே கைப்பற்றி இருந்தது.
தமிழ்நாட்டில் நடந்த ட்விஸ்ட்
குறிப்பாக தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக உடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. மிசா அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட திமுக, ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
முடிவில், அதிமுக 17 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் சிபிஐ கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் திமுக 2 இடங்களிலும், ஜனதா கட்சி 4 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது.