தீர்க்கப்படாத நிதி நிறுவன மோசடிகள்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர வேண்டும் - அன்புமணி!
தமிழ்நாட்டில் மோசடி நிறுவனங்கள் காளான்களைப் போல உருவெடுத்து மக்களை ஏமாற்றுவதற்கான காரணங்களில் மக்களின் விழிப்புணர்வின்மை 10% என்றால், மீதமுள்ள 90% காவல்துறையின் அலட்சியம் தான் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அனைத்து நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளையும் விரைவுபடுத்தி, நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து செலுத்திய பணத்தை மீட்கும் விஷயத்தில் காவல்துறை காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
மதுரை சின்ன செக்கிக்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு மதுரம் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் புதிய நிதி நிறுவனம் ஒன்று கடந்த 2011&ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை, வேலூர், விழுப்புரம், சென்னை, ராமநாதபுரம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த நிறுவனத்தின் கிளைகள் திறக்கப்பட்டன.